சினிமா செய்திகள்

அக்னிதேவ் படவிவகாரம் நடந்தது என்ன? பாபிசிம்ஹா விளக்கம்

அக்னி தேவி படத்தில் நாயகனாக நடித்துவிட்டு, தற்போது நான் நடிக்கவில்லை என்று கூறி ரூ.3 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்படுத்திய நடிகர் பாபி சிம்ஹா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க கவுரவ செயலாளர் துரைராஜ் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

எங்களது சங்க உறுப்பினர் ஜான்பால்ராஜ் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் கடந்த 22ம் தேதி அக்னிதேவி திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக பாபி சிம்ஹா முறைப்படி ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்தார். ஆனால் இந்த திரைப்படம் படப்பிடிப்பு தொடங்கி சில நாட்கள் பாபி சிம்ஹா தனது இஷ்டத்திற்கு ஒப்பந்தத்தினை மாற்ற வேண்டும் என்று கூறியதால் இயக்குநர் ஜான்பால்ராஜ் உடன் பிரச்னை ஏற்பட்டது.

படத்தில் தன் நடிப்பை விட மற்றவர்களின் நடிப்புதான் அதிகமாக காட்டப்பட்டுள்ளதால் தான் நடித்த காட்சிகள் அனைத்தும் திரும்ப படம்பிடிக்க வேண்டும் என்று பாபி சிம்ஹா கூறியுள்ளார். இந்த பிரச்னை தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சங்கத்தில் இருந்து நடிகர் பாபி சிம்ஹாவிடம் பேசியபோது முறையாக பதில் கூறாமல் நீதிமன்றத்திற்கு செல்வதாக தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, நடிகர் பாபி சிம்ஹா பத்திரிகையாளர்களிடம், அக்னி தேவி திரைப்படத்தில் தன்னை மாதிரி வேறு ஒரு ஆள் வைத்து படத்தினை எடுத்திருப்பதாகவும், அதனால் யாரும் இந்த திரைப்படத்தை பார்க்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார். இதனால் இந்த திரைப்படத்திற்காக ரூ.3 கோடிக்கு மேல் தயாரிப்பாளருக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே, இயக்குநர் ஜான்பால்ராஜிக்கு கடும் மன உளைச்சல் ஏற்பட்டு பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட்டு வருவதாக எங்களது சங்கத்தில் புகார் அளித்துள்ளார். எனவே சம்பந்தப்பட்ட நடிகர் பாபி சிம்ஹா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.

இந்தச் செய்திக்கு பாபிசிம்ஹா தரப்பு என்ன சொல்கிறது?

அண்மையில் தயாரிப்பாளர் சங்கத்தில் சுமார் 70 பேர் கலந்து கொண்ட கூட்டத்தில் கலந்து கொண்டு இந்தச் சிக்கல் குறித்து முழுமையாக விளக்கமளித்தார் பாபிசிம்ஹா. அதற்குப் பிறகும் இப்படி ஒரு புகார் என்பது புரியவில்லை.

கதையில் சகுந்தலாதேவி என்கிற கேரக்டர் வில்லியாக இருக்கும்என்று சொன்னதை நம்பி நடிக்கப்போனார்.

அங்கு போனால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்ததை பாபிசிம்ஹா ஏற்கவில்லை. ஒரு நடிகர் எல்லோருக்கும் பொதுவானவராக இருக்கவேண்டும். ஒரு குறிப்பிட்ட கட்சியினரின் கோபத்திற்கு ஆளாகிற நிலை தேவையில்லை என்பதே அவருடைய நிலை.

இவர் மறுத்தவுடன் வேறு ஒருவரை வைத்து டப்பிங் பேசுகிறார்கள். டப்பிங்கில் இவர் பேசுகிற மாதிரி தப்பான வசனங்களை சேரத்துவிட்டால் அதற்கு யார் பொறுப்பு?

இதுபோன்று அவர் பக்கம் வலிமையான நியாயம் இருக்கிறது. எனவேதான் அவர் துணிந்து நீதிமன்றம். சென்றிருக்கிறார்.

வழக்கு நடந்துகொண்டிருக்கிறது அதில் நிச்சயம் அவருக்கு நீதி கிடைக்கும் என்கிறது பாபிசிம்ஹா தரப்பு.

Related Posts