விமர்சனம்

ஜூலை காற்றில் – திரைப்பட விமர்சனம்

உயர்நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்தவர் நாயகன் அனந்த்நாக். ஐந்து நாள் வேலை, வார இறுதியில் ஜாலி என்று இருக்கிறார்.

நண்பனின் திருமணத்தில் நாயகி அஞ்சு குரியன் அவருக்குப் பழக்கமாகிறார். அந்தப் பழக்கம் அப்படியே காதலாக மாறுகிறது. இருவருமே திருமண நிச்சயம் நடக்கிறது. அதன்பின் திருமணம் வேண்டாம் என்று விலகுகிறார் நாயகன்.

அதன்பின் இன்னொரு நாயகி சம்யுக்தா மேனனைச் சந்திக்கிறார். அது காதலாக மாறுகிறது. இந்தமுறை நாயகி திருமணத்திற்கு மறுக்கிறார்.

அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படம்.

நாயகன் அனந்த்நாக் இக்கால இளைஞர்களின் பிரதிநிதி போலச் சித்தரிக்கப்படுகிறார். காதல் மோதல் பிரிவு கோபம் ஆகிய எல்லா உணர்வுகளையும் வெளிப்படுத்தக்கூடிய வேடம் அவருக்கு.

நாயகி அஞ்சுகுரியன் நல்வரவு. அவருடைய கதாபாத்திரமும் சரியாக இருக்கிறது.

இன்னொரு நாயகி சம்யுக்தா மேனன் சுதந்திரச் சிந்தனை கொண்ட பெண்ணாக வருகிறார்.

கோவாவில் வருகிற நாயகி பலோமா மொன்னப்பா கவனிக்க வைக்கிறார்.

நாயகனின் நண்பராக வருகிற சதீஷ், நிறையப் பேசுகிறார். கொஞ்சமாகச் சிரிக்க வைக்கிறார்.

ஜோஷ்வா ஸ்ரீதரின் இசையில் பாடல்கள் கேட்க வைக்கின்றன.

சேவியர் எட்வர்ட்ஸ் ஒளிப்பதிவு படத்தின் தன்மைக்குப் பலம் சேர்க்கிறது.

இயக்குநர் கே.சி.சுந்தரம், இளைஞர்களின் மனப்போக்கை மையமாக வைத்துத் திரைக்கதை அமைத்திருக்கிறார். திரைக்கதையில் இருக்கும் ஆழம் திரையில் இல்லாததால் ஜூலைகாற்று இதமாக இல்லை.

Related Posts