செய்திக் குறிப்புகள்

சர்கார் படத்துடன் திமிருபுடிச்சவன் வெளியாவது ஏன்? – விஜய் ஆண்டனி விளக்கம்

கணேஷா இயக்கத்தில் விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் உட்பட பலர் நடித்திருக்கும் படம் திமிருபுடிச்சவன்.

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்திருக்கிறார்.

நவம்பர் 6 ஆம் தேதி தீபாவளியன்று வெளியாகவிருக்கும் இப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் நாயகன் விஜய் ஆண்டனி, நாயகி நிவேதா பெத்துராஜ், கலை இயக்குநர் சக்தி வெங்கட்ராஜ், நடிகர்கள் சம்பத்ராம், கதிர், நடிகை ஆதிரா, சிந்துஜா, விசுவல் எஃபெக்ட்ஸ் ரமேஷ் ஆச்சார்யா, நடன இயக்குநர் தஸ்தா, பாடலாசிரியர் அருண் பாரதி, நடிகர்கள் கதிர், வினோத், செந்தில் குமரன், நிக்ஸன், சாய் ராகுல், கிச்சா, ஜாக் ராபின் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

படத்தின் நாயகி நிவேதா பெத்துராஜ் பேசும் போது,

கதையைச் சொல்லும் போதே இயக்குநர் கணேஷா என்னை பயமுறுத்தி விட்டார். புல்லட் ஓட்டணும்னு சொன்னார், அதை கற்றுக் கொண்டு ஓட்டினேன், திடீரென மீன் பாடி வண்டி ஓட்டச் சொன்னார். டப்பிங்கில் படத்தைப் பார்த்தபோது எனக்கே வித்தியாசமாக இருந்தது. படம் முழுக்க புதுசு புதுசா நிறைய செய்ய சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.என் நடிப்புலக வாழ்வில் முக்கியமான படமாக இது இருக்கும் என்றார்.

படத்தின் இயக்குநர் கணேஷா பேசுகையில்,

பாத்திமா மேடம் முதலில் கதையைக் கேட்டார். 7 மணி நேரம் சொன்னபிறகு இடைவேளை என்று சொன்னேன். அதோடு மறுபடி பார்க்கலாம் என்று சொல்வார் என நினத்தேன். ஆனால், நல்லா இருக்கு என்று சொல்லி, தொடர்ந்து முழுக் கதையையும் கேட்டார். விஜய் ஆண்டனி சார் படங்களுக்கு இதுவரை பூஜை போட்டதே இல்லை. ஆனால் எனக்காக பூஜை போட்டார். நான் கேட்ட எல்லா விஷயங்களையும் செய்து கொடுத்தார் விஜய் ஆண்டனி சார். என்னை முழுமையாக மதித்தார்.

ஒரு தயாரிப்பாளர் கதை நல்லா இருக்கு, கதையை மட்டும் வச்சிக்கிட்டு வேற இயக்குனர் வச்சி படத்தைப் பண்ணலாம் என சொன்னார். ஆனால் விஜய் ஆண்டனி சார் தோல்வி அடைஞ்சவர்தான் நல்ல படத்தைக் கொடுப்பார் எனச் சொல்லி நான் தான் இயக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். நான் பெரிய நடிகர்களைக் கேட்டு பெரிய லிஸ்ட் கொடுத்தேன். அவர் புகழ் வெளிச்சம்படாத நல்ல திறமையான நடிகர்களை நடிக்க வைக்கலாம் எனச் சொன்னார். அவர்கள் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அவர் நம்பிக்கை வீண் போகாது என்றார்.

நாயகன் விஜய் ஆண்டனி பேசும் போது,

தனிமரம் தோப்பாகாது என்பது போல இதில் என் பங்கு குறைவு தான். எல்லாப் படத்திலும் இயக்குநர்தான் ஹீரோ. இந்தப் படத்தை உருவாக்க கணேஷா சார் மிகக் கடுமையாக உழைத்திருக்கிறார். என்னுடைய கடந்த இரண்டு படங்கள் வியாபார ரீதியாக சரியாகப் போகவில்லை. படத்தின் வேலை முடிந்ததால் தீபாவளிக்கு ரிலீஸ் செய்கிறோம்.வேறு எந்தக் காரணமும் இல்லை. இயக்குநருக்காக தீபாவளிக்கு ரிலீஸ் செய்கிறோம். இந்தப் படத்தில் ரொமான்ஸ் இல்லை, இந்தப் படத்துக்கு பிறகு ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க பயிற்சி எடுக்க இருக்கிறேன் என்றார் நடிகர் விஜய் ஆண்டனி.

Related Posts