தொட்ரா – திரைப்பட விமர்சனம்
பழனி அருகே சமுத்துவபுரத்தில் வசிக்கும் நாயகன் பிருத்விராஜுக்கும் சாதிச் சங்கப் பிரமுகராக இருக்கிற எம்.எஸ்.குமாரின் தங்கை நாயகி வீணாவுக்கும் காதல்.
இந்தக்கதையை வைத்துக்கொண்டு சமகாலத்தில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட ஆணவக் கொலை நிகழ்வை திரைக்கதையில் சேர்த்து உருவாக்கப்பட்டிருக்கிறது இந்தப்படம்.
நாயகன் பிருத்விராஜ், நாயகி வீணா ஆகியோரின் காதல் காட்சிகள் வழக்கம் போல் இருந்தாலும் சங்கர் என்று நாயகனுக்கும் திவ்யா என்று நாயகிக்கும் பெயர் சூட்டியிருப்பதால் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ? என்கிற பதட்டத்துடன் பார்க்க வேண்டியிருக்கிறது.
ஆட்டம் பாட்டம் காதல் என்று எல்லாவற்றிலும் பிருத்விராஜ் நன்றாகத் தேர்ச்சி பெற்றிருக்கிறார். கல்குவாரியில் அவர் அடிவாங்கும்போது நமக்கு வலிக்கிறது.
நாயகி வீணா நல்வரவு. அழகாக இருக்கிறார். அமைதியாக அதேசமயம் அழுத்தமான நடிப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகியின் அண்ணன் பவுன்ராஜ் என்கிற சாதிச்சங்கத் தலைவராக நடித்திருக்கும் எம்.எஸ்.குமார், புதுநடிகர் போல் இல்லாமல் தேர்ந்த நடிகர் போல் நன்றாக நடித்திருக்கிறார். சாதி கவுரவத்தை மீறி தங்கைப் பாசத்தால் மனைவியை அடிக்கும் காட்சி நன்று.
எம்.எஸ்.குமாரை வைத்து சாதிச்சங்கத்தினர் செய்யும் அடாவடிகளை வெளிப்படுத்தியிருக்கும் அதேநேரம், இயக்குநர் ஏ.வெங்கடேசஷை வைத்து இதுபோன்ற காதல் நிகழ்வை வைத்துக்கொண்டு பணம் பறிப்போரையும் அம்பலப்படுத்தியிருக்கிறார்கள்.
உத்தமராசாவின் இசையில் சிம்பு பாடியிருக்கும் பக்கு பக்குனு பாடல் உட்பட எல்லாப் பாடல்களும் கேட்கும்படி இருக்கின்றன.
செந்திலின் ஒளிப்பதிவில் பழனிமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் அழகாக இருக்கின்றன.
முடிவைத் தொடக்கத்திலேயே காட்டி விட்டாலும் அதை நோக்கிய பயணத்தைத் தொய்வில்லாமல் கொண்டு செல்கிறார் இயக்குநர் மதுராஜ்.
சாதி மீறிக் காதலிப்போர், உயர் சாதிப்பெருமை, சாதிச்சங்கம். உதவுவதாகக் கூறி பணம் பறிக்க நினைக்கும் இடைத்தரகர்கள், காவல்துறை ஆகியோரால் எவ்வளவு இன்னல்களுக்கு ஆளாகிறார்கள் என்பதை விளக்கமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். வேதனையாக இருக்கிறது.
சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்கிற அம்பேத்கரின் வரிகளோடு படம் முடியும் போது மனம் கனக்கிறது.











