நடிகர் விஜய்க்கு சிறைத்தண்டனை கிடைக்க பாடுபடுவோம் – பரபர அறிவிப்பு
நடிகர் விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சியை சர்கார் படத்தில் இருந்தும், இணையதளங்களில் இருந்தும் உடனடியாக நீக்கவேண்டும் என்று படத்தின் தயாரிப்பாளர் கலாநிதிமாறன், நடிகர் விஜய், இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் ஆகியோருக்கு தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரதுறை எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியது.
அதைத் தொடர்ந்து, https://twitter.com/sunpictures எனும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் இருந்து புகைபிடிக்கும் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக பசுமைத் தாயகம் அமைப்பைச் சேர்ந்த அருள்ரத்தினம் வெளியிட்டுள்ள குறிப்பில்…
நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவிருக்கும் சர்க்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகர் விஜய் வாயில் சிகரெட்டுடன் தோன்றும் காட்சி வெளியானது. இது இளைஞர்களை புகைப் பழக்கத்திற்கு அடிமையாக்கும் செயல் என்று பா.ம.க நிறுவனர் இராமதாசு அய்யா அவர்கள், இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள்உள்ளிட்டோர் கடுமையான கண்டத்தை தெரிவித்திருந்தனர்.
இதனை அடுத்து 26.6.2018 அன்று சென்னை காவல்துறை ஆணையரிடத்திலும், தமிழ்நாடு பொதுச்சுகாதாரத்துறையிலும் – மருத்துவர் அய்யா அவர்களை நிறுவனராகக் கொண்ட பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் புகார் பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து – புகைபொருட்களையும் புகைபழக்கத்தையும் மறைமுகமாக பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் சர்க்கார் படத்தின் போஸ்டர் வடிவமைக்க பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி உள்ள தமிழக அரசின் பொது சுகாதாரதுறை படத்தின் தயாரிப்பாளரான சன்பிக்சர்ஸ் கலாநிதி மாறன், நடிகர் விஜய், இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் ஆகியோருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
அதில் வாயில் சிகரெட் பிடித்தபடி உள்ள நடிகர் விஜய்யின் படத்தை இணையதளங்களில் இருந்தும் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்தும் உடனடியாக நீக்க வேண்டும் என்றும் இல்லையேல் சட்டபூர்வ நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனுடன் தினகரன் நாளிதழில் வெளியிடப்பட்ட நடிகர் விஜய் புகைபிடிக்கும் காட்சியின் விளம்பரத்தின் நகலையும் இணைத்து கலாநிதிமாறன், விஜய், முருகதாஸ் ஆகியோருக்கு பொது சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் புகையிலை தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு பிரிவு அனுப்பி வைத்துள்ளது.
புகைப்பழக்கத்தை இளைஞர்களிடம் இருந்து அறவே ஒழிக்க அரசு மேற்கொண்டுவரும் முதல் கட்ட முயற்சிகளுக்கு திரை உலகினர் ஒத்துழைக்க வேண்டும் என்று பொது சுகாதாரதுறை கேட்டுக்கொண்டுள்ளது.
“குற்றத்துக்கு தண்டனை தான்: பசுமைத் தாயகத்தின் கோரிக்கை!”
“திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகள் இடம்பெறுவதை கட்டுப்படுத்தும் இந்திய அரசு அரசாணை 14.11.2011 அன்று முதல் செயல்பாட்டில் உள்ளது. (இந்திய நலவாழ்வுத்துறை அமைச்சக அரசாணை எண். GSR 786, நாள் 27.10.2011).
இந்த அரசாணையின் பிரிவு 9(2) திரைப்பட விளம்பரங்களில் எந்தவிதமான புகையிலைப் பொருளும் இடம்பெறக் கூடாது; புகைபிடிக்கும் காட்சிகளும் இடம் பெறக் கூடாது என அனைத்து விதமான புகையிலை விளம்பரங்களுக்கும் முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. (Section 9(2) : Promotional materials and posters of films and television programmes shall not depict any tobacco products or their usage in any form.)”
“நடிகர் விஜய், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ள சர்க்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் (First Look) விளம்பரத்தில் நடிகர் விஜய் புகைபிடிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளதன் மூலம் 2003 இந்திய புகையிலைக் கட்டுப்பாட்டுச் சட்டம் (The Cigarette and other Tobacco Products (Prohibition of Advertisement and Regulation of Trade and Commerce, Production, Supply and Distribution) Act 2003) அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் பிரிவு 5-ன் கீழ் இது தண்டனைக்குரிய குற்றம் ஆகும். இக்குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு மேற்படி சட்டத்தின் பிரிவு 22-ன் கீழ் இரண்டு ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்க வேண்டும்”
– இது தான் பசுமைத் தாயகத்தின் புகாரில் உள்ள கோரிக்கை ஆகும்.
வெறும் எச்சரிக்கையுடன் மட்டுமின்றி, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்காக பசுமைத் தாயகம் அமைப்பு பாடுபடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.











