சிகா 25 அதிகாரப்பூர்வ அறிவிப்பு – தாடி எடுத்தது எப்படி?
சிவகார்த்திகேயன் நடிக்கும் 25 ஆவது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிசம்பர் 14 மாலை வெளியானது.இப்படத்தை,தற்போது தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லிக்கடை படத்தைத் தயாரிக்கும் டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில்…
‘வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய்கின்ற தமிழ் எங்கள் மூச்சாம்’ – பாவேந்தர் பாரதிதாசன்
எங்களது டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் Production No.2-வாக உருவாகும் திரைப்படத்தை பிரமாண்டமான முறையில் தயாரிக்க உள்ளோம் என்பதை மகிழ்ச்சியோடு இந்தத் தருணத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.
தமிழ்த் திரையுலகில் தன் நடிப்பால் மக்கள் மனதில் தனி இடம்பிடித்திருக்கும் திரு. சிவகார்த்திகேயன் அவர்களின் 25 ஆவது படமாக ‘டான் பிக்சர்ஸின் Production No.2’ அமைவது எங்களுக்குப் பெருமை அளிக்கிறது. பெரும் எதிர்பார்ப்புகளோடு உருவாகும் இந்தத் திரைப்படத்தைத் தேசிய விருதுபெற்ற இயக்குநர் திருமிகு. சுதா கொங்கரா அவர்கள் இயக்குகிறார்.
எப்போதுமே தனித்துவமிக்க கதைகளைத் தேர்வு செய்திடும் திரு. ஜெயம் ரவி அவர்களும் எங்களோடு இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் திரு. அதர்வா, செல்வி. ஸ்ரீலீலா உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவாளராக திரு. ரவி கே.சந்திரன் அவர்களும், இசையமைப்பாளராக திரு. ஜி.வி.பிரகாஷ்குமார் அவர்களும் பங்களிக்கிறார்கள். குறிப்பாக, திரு. ஜி.வி.பி அவர்களுக்கு இசையமைப்பாளராக இது 100 ஆவது திரைப்படம் என்பது கூடுதல் சிறப்பு. உங்களுக்கு புதிய திரை அனுபவத்தைக் கொடுக்கும் வகையில் #SK25 நிச்சயம் அமையும் என உறுதியளிக்கிறேன்
இவ்வாறு அதில் கூறப்பட்டிருக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்கவிருக்கிறது.
சிவகார்த்திகேயன் இப்போது நடித்துக் கொண்டிருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்துக்காக தாடி வைத்திருந்தார்.அப்படத்தின் படப்பிடிப்பை முடிக்கும்வரை தாடியை எடுக்க இயலாது என்று அவர் சொன்னதால் இயக்குநருக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகச் சொல்லப்பட்டது.
அதன்பின் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளில் உடன்பாடு எட்டப் பட்டிருக்கிறது.எப்படியெனில்?
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்பு தொடங்க சுமார் மூன்று மாதங்கள் அல்லது அதற்கும் மேலாகும் என்கிற நிலை.அதுவரை சும்மா இருக்கமுடியாது.நான் தாடியை எடுத்துவிட்டு இந்தப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன்.நீங்கள் படப்பிடிப்பு எப்போது என்று சொன்னால் அதற்கேற்ப தாடி வளர்த்துக் கொள்கிறேன் என்று முருகதாசிடம் சொல்லிவிட்டாராம் சிவகார்த்திகேயன்.அவரும் அதற்குச் சம்மதம் சொல்லியிருக்கிறார்.
இதனால் யாருக்கும் எந்த நெருடலும் இல்லாத நிலை ஏற்பட்டுவிட்டது.அதனால் அதிரடியாக இந்தப் படத்தை அறிவித்து படப்பிடிப்பைத் தொடங்கவிருக்கிறார்கள்.











