சினிமா செய்திகள்

வெங்கட்பிரபு ஜெய் மோதல் – புதுப்பட சிக்கல்

வெங்கட் பிரபு இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளியான படம் ‘சென்னை 600 028’.அப்படத்தில் சிவா,ஜெய்,நிதின்சத்யா,அரவிந்த் ஆகாஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.மட்டைப்பந்து விளையாட்டையும் நட்பையும் மையமாகக் கொண்டு நகைச்சுவையாக எடுக்கப்பட்ட அந்தப்படம் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றது.

அதன்பின்,2016 ஆம் ஆண்டு அப்படத்தின் இரண்டாம்பாகம் வெளியானது.முதல்பாகத்தில் நடித்த நடிகர்களே இரண்டாம்பாகத்திலும் நடித்திருந்தனர்.அப்படமும் வரவேற்பைப் பெற்றதாகச் சொல்லப்பட்டது.

அதன்விளைவாகவும்,சிவகார்த்திகேயனை வைத்து வெங்கட்பிரபு இயக்கும் படம் கைவிடப்பட்டதாலும் சென்னை 28 படத்தின் மூன்றாம்பாகத்தை எடுக்க முடிவுசெய்தார் வெங்கட்பிரபு.

மூன்றாம்பாகத்திலும் முதலிரண்டு பாகங்களில் நடித்த நடிகர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது.இந்தப்படத்தை வேறொரு தயாரிப்பாளர் தயாரிக்கிறார் என்றும் வெங்கட்பிரபுவே முதல்பிரதி அடிப்படையில் தயாரித்துக் கொடுக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாகவே இயக்குநர் வெங்கட்பிரபுவுக்கும் நடிகர் ஜெய்க்கும் இடையே மோதல் ஏற்பட்டுவிட்டதாகச் சொல்லப்படுவது திரைத்துறை வட்டாரங்களில் பேசுபொருளாக இருக்கிறது.

என்ன நடந்தது?

சென்னை 28 இல் நடித்த நடிகர்கள் அனைவரும் ஒரு குடும்பம் போல் இருக்கிறார்கள் என்று சொல்லப்படுவதுண்டு.அந்த உரிமையில்,சென்னை 28 மூன்றாம் பாகத்தின் படப்பிடிப்பை வெங்கட்பிரபுவே திட்டமிட்டுவிட்டு அந்தத் தேதிகளில் அனைவரும் வந்துவிடவேண்டுமென்று சொல்லியிருக்கிறார்கள்.

இது நடிகர் ஜெய்க்கு பிடிக்கவில்லையாம்.எவ்வளவு நாட்கள் நடிக்கவேண்டும்? சம்பளம் என்ன? என்கிற எந்த விவரத்தையும் சொல்லாமல் படப்பிடிப்புக்கு அழைப்பதா? என்று கோபப்பட்டிருக்கிறார்.அதன்பின்,அவருடைய சம்பளம் இதுதான் என்று மிகக்குறைந்த தொகை ஒன்றை வெங்கட்பிரபு தரப்பு சொல்லியிருக்கிறது.அது ஜெய்க்கு மேலும் கோபத்தை ஏற்படுத்திவிட்டதாம்.

நான்,இப்போது மற்ற படங்களில் நடிக்க இவ்வளவு சம்பளம் வாங்கிக்கொண்டிருக்கிறேன்,இந்தப்படத்தில் நடிக்க இவ்வளவு சம்பளம் கொடுத்தால் நடிப்பேன்,இல்லையெனில் வரமாட்டேன் என்று கறாராகச் சொல்லிவிட்டாராம்.

இதைக்கேட்டு திடுக்கிட்ட வெங்கட்பிரபு,படத்தில் ஜெய்யின் பாத்திரத்தை குறைந்த நேரமே இடம்பெறுமாறு மாற்றிவிட்டார் என்கிறார்கள்.அதன்பின்,இவ்வளவு நாட்கள் நடித்தால்போதும் அதற்கு இவ்வளவு சம்பளம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

அது கேட்ட சம்பளத்துக்குப் பக்கத்தில் இருந்ததால் அதை ஒப்புக்கொண்டாராம் ஜெய்.அதோடு நீங்கள் கேட்கும் தேதிகளை மொத்தமாகக் கொடுக்கமுடியாது என்று சொன்னதோடு முதலில் இரண்டுநாட்கள் நடிக்கிறேன் என்று சொல்லியிருக்கிறாராம்.

வேறு வழியில்லாமல் அவர் கொடுத்த தேதிகளில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

தொடங்கும்போதே இப்படி இருக்கிறதே? போகப்போக என்னவாகுமோ? என்பதுதான் அந்தக்குழுவை அறிந்தவர்கள் மத்தியில் பெரிதும் பேசும் விசயமாக இருக்கிறது.

– ராம்

Related Posts