மீண்டும் தள்ளிப்போகிறது இரண்டுவானம் – ஏன்?
விஷ்ணுவிஷால்,மமிதா பைஜு உட்பட பலர் நடித்திருக்கும் படம் இரண்டு வானம்.
முண்டாசுப்பட்டி,ராட்சசன் ஆகிய படங்களைத் தொடர்ந்து மீண்டும் விஷ்ணுவிஷாலை வைத்தே அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார் ராம்குமார் என்றும் அப்படத்தை சத்யஜோதி நிறுவனமே தயாரிக்கிறது என்றும் 2023 சனவரி 20 ஆம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது.
2025 மார்ச் 16 அன்று இப்படத்தின் பெயரும் முதல்பார்வையும் வெளியானது.படத்தின் பெயர் இரண்டு வானம்.அதில் நாயகன் விஷ்ணுவிஷாலும் நாயகி மமிதாபைஜுவும் இருக்கும் முதல்பார்வை வெளியிடப்பட்டது.
இப்படத்துக்கு இசை: திபு நினன் தாமஸ்,ஒளிப்பதிவு: தினேஷ் கே.பாபு,படத்தொகுப்பு: சான் லோகேஷ்,கலை இயக்கம்: கோபி ஆனந்த்,
இவ்வாண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி, இப்படம் இவ்வாண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.படத்தின் நாயகன் விஷ்ணுவிஷாலும் அதை உறுதி செய்திருந்தார்.
ஆனால்,அந்தத் தேதியில் படம் வெளியாகவில்லை.
ஏன்?
படத்தயாரிப்பு நிறுவனத்துக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாகவே படம் தாமதமாகிறது எனச் சொன்னார்கள்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு நாட்கள் அதிகமானது உட்பட பல காரணங்களால் மொத்தச் செலவு திட்டமிட்டதைவிடப் பன்மடங்கு அதிகரித்துவிட்டது என்றும் அதனால் தயாரிப்பு நிறுவனம் சிக்கலில் இருப்பதாகவும் சொல்லப்பட்டது.
இந்நிலையில்,செப்டம்பர் 24 அன்று தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில்,இப்படம் அக்டோபர் 23 அன்று வெளியாகும் என்று குறிப்பிட்டிருந்தது.
இப்போது,அந்தத் தேதியிலும் படம் வெளியாகாது என்கிறார்கள்.
ஏன்?
இப்படம் நன்றாக வந்திருக்கிறது.நிச்சயம் வெற்றிப்படமாகும் என்பது படக்குழு மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை.எனவே,படவெளியீடும் சரியாக இருக்கவேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள்.
அக்டோபர் 15 ஆம் தேதி ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 படம் வெளியாகவிருக்கிறது.அதனால் அடுத்தவாரமே இந்தப்படத்தை வெளியிட்டால் போதுமான மற்றும் நல்ல திரையரங்குகள் கிடைக்காது எனும் நிலை.எனவே இரண்டு வானம் படத்தை அக்டோபர் 23 அன்று வெளியிட வேண்டாமென முடிவெடுத்திருக்கிறார்களாம்.
அடுத்து எப்போது என்றால்?
நவம்பரில் தீபாவளிப்படங்கள் உள்ளிட்டவை ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருப்பதால்,இப்படத்தை டிசம்பர் 11 அன்று வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.
இப்போதெல்லாம்,இணைய ஒளிபரப்பு உரிமையைப் பெறும் இணையநிறுவனங்களே வெளியீட்டுத் தேதியையும் முடிவு செய்கின்றன. இப்படத்தின் உரிமையை வாங்கியிருக்கும் நெட்ப்ளிக்ஸ் நிறுவனமும் இந்தத் தேதியில் படத்தை வெளியிட சம்மதம் சொல்லிவிட்டார்களாம்.
விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.











