சினிமா செய்திகள்

ரஜினி இல்லாமல் நடந்த ஜெயிலர் 2 இசைவிழா – ஏன்?

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர் 2.இப்படத்தில்,எஸ்.ஜே. சூர்யா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு மற்றும் மிர்னா உட்பட பலர் நடிக்கிறார்கள்.

அனிருத் இசையமைக்கிறார்.சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இப்படம்,அக்டோபர் 15,2026 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில்,இப்படத்தின் இசைவிழா வரும் ஞாயிறன்று அதாவது அக்டோபர் 4 அன்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்ற விளம்பரம் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

அதைப்பார்த்ததும்,எப்போது இசைவிழா நடந்தது? என்கிற கேள்வி எல்லோருக்கும் எழுந்தது.இதுகுறித்து விசாரித்தால்?

இசைவிழா என்றால் வழக்கம்போல படக்குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொள்ளும் விழா இல்லை.ஜெயிலர் 2 ரேவ் என்ற பெயரில் ஒரு நிகழ்வு நேற்றிரவு நடந்திருக்கிறது.

ரேவ் பார்ட்டி (Rave Party) என்பது பொதுவாக இரவில் தொடங்கி விடிய விடிய அல்லது மறுநாள் காலை வரை தொடர்ந்து நடக்கும் ஒரு வகையான தீவிர நடன மற்றும் இசை பொழுதுபோக்கு விருந்து ஆகும்.தமிழில் இதனை “மதுக்களியாட்டம்” அல்லது “கூட்டுக் களியாட்ட விருந்து” என்று குறிப்பிடலாம்.

இந்தப் பெயரை வைத்துக் கொண்டு ஜெயிலர் 2 படத்தின் இசைவிழாவை நடத்தியிருக்கிறார்கள்.

சென்னை வர்த்தக மையத்தில் நடந்த இந்த நிகழ்வு விடிய விடிய நடந்ததா என்றால்? இல்லை.

மாலை ஆறு மணிக்கு தொடங்கும் என்று அறிவித்து ஏழரை மணிக்கு தொடங்கினார்கள்.ஒருமணிநேரம் பத்து நிமிடம் நடந்தது.அதாவது எட்டு நாற்பதுக்கு நிறைவடைந்துவிட்டது.

இந்நிகழ்வுக்கு இசையமைப்பாளர் அனிருத் மற்றும் இயக்குநர் நெல்சன் ஆகிய இருவர் மட்டுமே வந்தனர்.ரேவ் என்று அறிவித்ததால் ஜெயிலர் 2 படத்தில் இடம்பெறும் பாடல்கள் பாடப்பட்டன.இசைக்குழுவினருடன் சேர்ந்தும் தனியாகவும் அனிருத் பாடினார்.

ஒரு மணிநேரம் நடந்த இந்நிகழ்வை மூன்று மணிநேர நிகழ்வாக ஒளிபரப்பும் வித்தை சன் தொலைக்காட்சிக்குக் கைவந்த கலை.இந்தப்பாடல் பாடும் நிகழ்வுக்கு இடையே படத்தில் பங்குபெற்றோரின் பேட்டிகளை வெளியிட்டு நிகழ்ச்சியை ஒளிபரப்புவார்கள் என்று சொல்லப்படுகிறது.

ஜெயிலர் 2 இசைவிழாவில் ரஜினி ஏன் கலந்துகொள்ளவில்லை? ஏன் முழுமையான விழா நடக்கவில்லை? என்கிற கேள்விகள் வரக்கூடும் என்பது அவர்களுக்குத் தெரியும்தானே?

அதனால்தான்,நேற்று மைசூரில் நடந்த தர்மன் படத்தின் படப்பிடிப்பு நிகழ்விடத்தில் ஒரு தானியில் வந்து இரசிகர்களைச் சந்தித்தார் ரஜினி என்கிற காணொலி வெளியானது.

அதன்மூலம் ஒரேகல்லில் இரண்டு மாங்காய் அடித்திருக்கிறார்கள்.ஜெயிலர் 2 இசைவிழா நடத்த முடியாமல் போனதற்கு தர்மன் படப்பிடிப்புதான் காரணம் என்பது ஒன்று.ரஜினியின் அடுத்தபடம் வேகமாகத் தயாராகி வருகிறது என்கிற அறிவிப்பு இன்னொன்று.

எது எப்படியிருப்பினும் ஞாயிறன்று ஒளிபரப்பாகவிருக்கும் நிகழ்வு ரஜினி இரசிகர்களுக்கு மட்டுமின்றி திரைப்பட இரசிகர்களுக்கு ஓர் உற்சாகமான கொண்டாட்டமாக இருக்கும் என்கின்றனர்.இருக்கட்டும்.

– அரசகுமாரன்

Related Posts