சிவகார்த்திகேயனின் அடுத்த படக்கதை பஞ்சாயத்து – விவரம்
2025 ஆம் ஆண்டு நடிகர் சிலம்பரசனின் பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி 3 ஆம் தேதியன்று எஸ்டிஆர் 49,50,51 ஆகிய அவருடைய மூன்று படங்கள் குறித்த அறிவிப்பு வெளியானது.
இம்மூன்று படங்களில் எஸ்டிஆர் 49 படத்தை பார்க்கிங் பட இயக்குநர் இராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.இவ்விரண்டு தகவல்கள் மட்டும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.இப்படத்தில் சிம்பு அதிரடியான கல்லூரிப் பேராசிரியராக நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது.
அதன்பின் அந்தப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தானம் நகைச்சுவை வேடத்தில் நடிக்கிறார்.கயாடுலோகர் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆனார்.
இந்தப்படத்துக்கான தொடக்கவிழா கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்றது.உடனடியாகப் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டார்கள்.ஆனால்,அந்தத் தயாரிப்பு நிறுவனத்துக்கு ஏற்பட்ட சிக்கல் காரணமாக அந்தப்படம் தடைபட்டது.அதேசமயம்,மீண்டும் இந்தப்படம் நடக்கும் என்றும் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சொல்லப்பட்டது.
ஆனால்,அப்படி நடக்கவில்லை.சிம்பு ஒருபக்கம் போய்விட்டார்.இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இன்னொரு பக்கம் போய்விட்டார்.
இப்போது,சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் இயக்க ராம்குமார் பாலகிருஷ்ணன் ஒப்பந்தமாகியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.அந்தப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
அந்தப்படத்தின் கதை,எஸ்டிஆர் 49 படத்துக்காக எழுதப்பட்ட கதை என்கிற அதிகாரப்பூர்வமற்ற பேச்சு உலவுவதால்,சிக்கல் எழுந்துள்ளதாம்.
ராம்குமார் பாலகிருஷ்ணன் இந்தக்கதையைப் படமாக்குவதாகச் சொல்லித்தான் எங்களுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறார்.அதன்பின், இந்தத் திரைக்கதையை எழுதுவதற்காக,நாங்கள் நிறைய செலவு செய்துள்ளோம்,எனவே அந்தக்கதை எங்களுக்குச் சொந்தமானது.அதை வேறொரு நிறுவனத்தில் படமாக எடுப்பதை அனுமதிக்க முடியாது என்று டான் பிக்சர்ஸ் நிறுவனம் போர்க்கொடி தூக்கியிருக்கிறதாம்.
சிவகார்த்திகேயனை வைத்து எடுக்கப்படும் படத்தின் கதை வேறு என்று தொடக்கத்தில் சொன்னாலும் அதே கதைதான் என்கிற விசயம் வெளியே கசிந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.அதனாலேயே டான் பிக்சர்ஸ் நிறுவனம் கேள்வி எழுப்பியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
சிம்பு இப்போது அரசன் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.அதன்பின்,கீர்த்தீஸ்வரன் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.இவ்விரண்டு படங்களும் நிறைவடைய எப்படியும் ஓராண்டுக்கு மேல் ஆகிவிடும் என்பதால் அவர் இந்தச் சிக்கலில் தலையிடாமல் ஒதுங்கிக்கொண்டார் என்றும் சொல்லப்படுகிறது.
டான் பிக்சர்ஸ் நிறுவனத்தை சமரசம் செய்யும் முயற்சிகளும் பேச்சுவார்த்தைகளும் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன என்று சொல்கிறார்கள்.விரைவில் சுமுகத்தீர்வு எட்டப்பட்டுவிடும் என்றும் உடனே,சிவகார்த்திகேயனை வைத்து படப்பிடிப்பைத் தொடங்கிவிடுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
என்ன நடக்கப்போகிறதெனப் பொறுத்திருந்து பார்ப்போம்?













