September 19, 2026
விமர்சனம்

நூறுசாமி – திரைப்பட விமர்சனம்

பெண்களின் புறத்தோற்றத்தில் காட்டும் அக்கறையில் ஒரு துளிகூட அவர்களுடைய அக உணர்வுகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாத சமுதாயத்தில்,ஒரு பெண்ணின் உணர்வுநிலையிலிருந்து உருவாகியிருக்கும் படம்தான் நூறுசாமி.

கணவனை இழந்த ஒரு பெண்,இரண்டு மகன்களை வைத்துக்கொண்டு இந்தச் சமுதாயத்தை எதிர்கொள்கிறார்.மகன்களைப் படிக்கவைத்து ஆளாக்குகிறார்.ஒருகட்டத்தில்,அவருடைய தனிமைக்கு துணை தேவை என்று எண்ணுகிறார்.அதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன? என்பதைச் சொல்வதுதான் இப்படத்தின் திரைக்கதை.

இளம்வயதிலேயே கணவனை இழந்த மனைவியாக,பாசமிகு தாயாக,சமூகத்தடைகளைத் தாண்டி காதல் உணர்வு அரும்பும் மனிதியாக எனப்பல்வேறு உணர்வுகளைச் சிறப்பாக வெளிப்படுத்தி பெரும் வரவேற்புப் பெறுகிறார் நாயகி சுவாசிகா.வெளியில் பகிர்ந்துகொள்ளவியலாத பல நுட்பமான உணர்வுகளைக் கண்களிலும் உடல்மொழியிலும் வெளிப்படுத்தி வியப்பேற்படுத்தியிருக்கிறார்.

படத்தின் நாயகன் விஜய் ஆண்டனி,ஆனால் அவர் வருகையே மிகவும் தாமதமாகத்தான் இருக்கிறது.ஆனால் அது ஒரு குறையாகத் தெரியாத வண்ணம்,நடிப்பால் சமன் செய்திருக்கிறார்.இயக்குநர் கொடுத்த வேடத்துக்கு ஏற்ப தன்னை மொத்தமாகத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்.

அஜய் திஷான்,சக்தி ஆகிய இருவரும் சுவாசிகாவின் மகன்களாக நடித்திருக்கின்றனர்.இதுபோன்ற குடும்பங்களில் பையன்கள் எப்படியிருப்பார்களோ அதை அப்படியே பிரதியெடுத்திருக்கிறார் இயக்குநர்.அதற்குத் தக்க நடித்து காட்சிகளுக்குப் பலம் சேர்த்திருக்கிறார் இருவரும்.

அஜய் திஷான்,சக்தி ஆகியோரின் இணையர்களாக நடித்திருக்கும் காவியா அனில், பாடினி குமார் ஆகியோரும் நன்று.

நாயகி சுவாசிகாவின் அன்புமிகு அண்ணனாக நடித்திருக்கிறார் கருணாஸ்.அன்பு இருக்கும் இடத்தில் ஆவேசமும் இருக்கும் என்று காட்டுமிடம் அதிர்வு.

லிஜோ மோல் ஜோஸ்,பாலாஜி சக்திவேல், அருள்தாஸ்,பக்ஸ்,வினோதினி ஆகியோரின் வேடங்களும் அவற்றில் அவர்களுடைய நடிப்பும் சிறப்பு.

ஒளிப்பதிவாளர் எஸ்.பி.தர்ஷன் கிஷோர்,இயக்குநரின் எழுத்துகளில் இருக்கும் உணர்வுகளைக் காட்சிகளிலும் காட்டிவிட வேண்டுமென மெனக்கெட்டிருக்கிறார்.அதனால் இரசிகர்களுக்குப் பல பரவசமூட்டும் காட்சிகள் கிடைத்திருக்கின்றன.

பாலாஜி ஸ்ரீராம் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்டு இரசிக்கும் இரகம்.அம்மா பாடல் காலத்தால் அழியா பாடல்.பின்னணி இசையில் காட்சிகளுக்கு உரம் சேர்த்திருக்கிறார்.

ஓர் உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திரைக்கதையை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் சசி.எல்லாப் படங்களும் ஒரேமாதிரியான கதையைக் கொண்டவையாக இருக்கின்றன என்று சலிப்படைபவர்களுக்கு இந்தா ஒரு புதுக்கதை என்று சொல்லியிருப்பதோடு உண்மையாக அதில் வாழ்ந்தவர்களே வியந்து போகும் வண்ணம் திரைமொழி பேசியிருக்கிறார்.

-ஆநிரையன்

Related Posts