பிக்பாஸ் பிரஜினின் புதிய அடையாளம்
‘அந்தரன்’ திரைப்படத்தில் பிரஜின்,இவானா வருண், அனுபமாகுமார்,ஆதிரன்பத்மன்,’அருவி’பாலா,மு.கி. சாம்பசிவம்,ரமேஷ்பாபு,அர்ஜுன் தேவ்,பிரியங்கா செல்வி,ஐஸ்வர்யா கண்ணன்,வி ஜே ராஜூ உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கிஷோர் ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹரி எஸ் ஆர் இசையமைத்திருக்கிறார்.படத்தொகுப்பு பணிகளை இக்னேசியஸ் அஸ்வின் மற்றும் சதீஷ் குரோசாவா மேற்கொள்ள கலைஇயக்கத்தை சசிகுமார் கவனித்திருக்கிறார் பரபரப்பான கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மு.கி. சாம்பசிவம் தயாரிக்க சந்தோஷ் ராவணன் இயக்கியிருக்கிறார்.
வரும் 25ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.
இதில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர் சி.வி.குமார், நடிகை சாண்ட்ரா,பிக்பாஸ் சபரி,’விக்கல்ஸ்’ விக்ரம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் நடிகர் ‘விக்கல்ஸ்’ விக்ரம் பேசுகையில்,
பிக்பாஸ் மூலமாகத்தான் இப்படத்தின் நாயகன் பிரஜின் நண்பரானார்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு அதற்கு முன்-பின் என ஒரு புதிய வரலாறு உருவாகும்.அதேபோல் நண்பர் பிரஜின் நடித்திருக்கும் ‘அந்தரன்’ படத்தின் மூலம் அந்தரனுக்கு முன்,அந்தரனுக்கு பின் என பிரஜினின் முன்னேற்றம் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.இருக்கும் என்று நம்புகிறேன்.
பிக் பாஸ் வீட்டில் அவர் தன்னுடைய திரையுலக பயணத்தில் நடைபெற்ற சம்பவங்களை விவரித்து கொண்டே இருப்பார்.அவர் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற வாழ்த்துகிறேன் என்றார்
நடிகை இவானா வருண் பேசுகையில்,
இது என்னுடைய முதல் திரைப்படம்.அதனாலயே இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல்.படப்பிடிப்புதளத்தில் குழுவாக இணைந்து அனைவரும் வழங்கிய ஆதரவிற்கும், அன்பிற்கும் நன்றி.படப்பிடிப்பு அனுபவங்கள் மறக்க முடியாதது.
நாங்கள் கலைஞர்கள்.உணர்வுகளை கதாபாத்திரங்களின் வழியாக வெளிப்படுத்துகிறோம்.அதன்மூலமாக நாங்கள் அனைவரும் இரசிகர்களுடன் தொடர்பு கொள்கிறோம். இந்தபடம் இரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.இந்த திரைப்படத்தை ஜூன் 25ஆம் தேதி அன்று திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
இயக்குநர் சந்தோஷ் ராவணன் பேசுகையில்,
இந்த திரைப்படத்தின் கதையை தயாரிப்பாளர் சாம்பசிவத்திற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பினேன். அதனை படித்து இரண்டு நாட்களில் ‘கதை நன்றாக இருக்கிறது.ஆனால் இப்போது என்னால் தயாரிக்க இயலாது’ என்றார்.அதன்பிறகு ஆறுமாதம் கழித்து மீண்டும் என்னை அழைத்து,’என்னுடைய நண்பர் ராஜேந்திர பிரசாத் வருகை தந்துள்ளார்.அவருக்கு கதையை சொல்ல முடியுமா?’ எனக்கேட்டார்.கதையை சொன்னேன் அவருக்கும் பிடித்திருந்தது.அவர் கொடுத்த பேராதரவின் காரணமாகத்தான் தயாரிப்பாளர் சாம்பசிவம் இப்படத்தின் பணிகளைத் தொடங்கினார்.அதன்பிறகு நெருக்கடியான சூழல் ஏற்பட்டபோதும் எனக்கு கொடுத்த வாக்குறுதியின் காரணமாக படத்தின் பணிகளை நிறைவு செய்து,தற்போது வெளியிடுகிறார்.இதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் இந்தப்படத்தில் அவர் சங்கர் எனும் கதாபாத்திரத்தில் நாயகியின் தந்தையாக நடித்திருக்கிறார்.அவர்தான் கதாநாயகனாகவும், வில்லனாகவும் இருப்பார்.அதற்கும் நன்றி.
நான் படப்பிடிப்புதளத்தில் நாயகி உடன் பேசியதே இல்லை.ஏனெனில் அவர் பேசும் இந்தி எனக்கு தெரியாது.நான் பேசும் ஆங்கிலம் அவருக்கு புரியாது. இதனால் இந்தியும் ஆங்கிலமும் தெரிந்த ஒரு உதவியாளரை வைத்துக் கொண்டுதான் அவருடன் பணியாற்றினேன்.ஆனால் திரையில் அவருடைய நடிப்பு இரசிக்கும் வகையில் இருக்கும்.
‘அந்தரன்’ என்றால் ஒரு ஹண்டர்.ஹண்டர் என்றால் மறைந்திருந்து தாக்குபவன் என பொருள். நம்முடைய தினசரி வாழ்வில் பல விஷயங்களை கடந்து செல்கிறோம்.ஆனால் அதன்மூலமாக ஏதேனும் மோசமான விளைவுகள் ஏற்பட்ட பிறகுதான் அதன் சீரியஸ்னஸை பார்க்கிறோம்.அப்படிப்பட்ட ஒரு விஷயத்தை மையமாகக் கொண்டதுதான் ‘அந்தரன்’.அதைப்பற்றி இப்போது விரிவாக சொல்ல இயலாது.படம் பார்க்கும்போது இரசிகர்கள் அனைவரும் உணர்வார்கள்.
இந்த திரைப்படம் நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வரும் ஒரு வழக்கினை தழுவியது.இந்த வழக்கு தொடர்பான எந்த விவரங்களையும் நான் இதுவரை தயாரிப்பாளரிடம் கூட பகிர்ந்து கொண்டதில்லை.படம் வெற்றி பெற்ற பிறகு இதைப்பற்றி சொல்கிறேன். ஆனால் நிச்சயமாக இந்த ‘அந்தரன்’ வழக்கமான படமாக இருக்காது என்பதை மட்டும் நான் உறுதியாக சொல்லமுடியும்.
‘போர் தொழில்’,’ராட்சசன்’,’தெகிடி’ ஆகிய திரைப்படங்களில் இருந்தது போன்ற ஒரு தனித்துவமான விஷயம் இந்தப்படத்தின் கிளைமாக்ஸில் இருக்கிறது. இது நிச்சயம் இரசிகர்களுக்குப் பிடிக்கும்.
இந்தப்படத்தின் கதை திரில்லர் தான்.ஆனால் அதனை ரொமான்டிக்காக சொல்லி இருக்கிறோம். ரொமான்டிக்கான சீன்கள் நிறைய இருக்கிறது.இது ஏன் என்பதற்கான காரணம் உச்சகட்ட காட்சியில் சொல்லியிருக்கிறோம்.
இந்தக்கதையை தயாரிப்பாளர் சி.வி.குமாரிடம் சொன்னேன்.அவர்தான் இந்தக்கதையில் பல விஷயங்களை சேர்க்கலாம் என ஆலோசனை சொன்னதுடன் மட்டும் நிற்காமல் நிறைய நடிகர், நடிகைகளையும்,தொழில்நுட்ப கலைஞர்களையும் பயன்படுத்திக்கொள் என பரிந்துரையும் செய்தார் . அவருக்கு இந்தநேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப்படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள்,நடிகைகள், தொழில்நுட்பக்கலைஞர்கள் அனைவரும் தங்களுடைய முழுமையான பங்களிப்பை அர்ப்பணிப்புடன் வழங்கினர் என்றார்.
தயாரிப்பாளர் சி வி குமார் பேசுகையில்,
இப்படத்தின் தயாரிப்பாளர் சாம்பசிவம் என்னுடைய நெருங்கிய நண்பர்.2019ம் ஆண்டில் ‘அடவி’ என்றொரு திரைப்படத்தை தயாரித்தார்.அந்தப்படத்தின் வெளியீட்டிற்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார். அன்றுமுதல் இன்றுவரை நல்லதொரு நட்பு நீடிக்கிறது.
அதன்பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து அவர் ‘மனிதர்கள்’ என்றொரு படத்தை தயாரித்தார். அந்த திரைப்படத்தை வணிகரீதியில் வெளியிடுவதற்காக பார்வையிட சொன்னார்.அந்தப்படத்தை பார்த்தேன். ஆனால் அது ஆர்ட் ஃபிலிம்.இந்த திரைப்படத்தை சர்வதேச திரைப்பட விழாவிற்கு அனுப்பலாம். திரையரங்குகளில் வெளியிட வேண்டாம் என ஆலோசனை சொன்னேன்.ஆனால் அவர் அந்தத் திரைப்படத்தையும் துணிச்சலுடன் திரையரங்குகளில் வெளியிட்டார்.
இயக்குநர் சந்தோஷ் இராவணன் எனக்கு மிகவும் தெரிந்தவர்.கொரோனா காலகட்டத்திற்கு முன் என்னுடைய அலுவலகத்தில் பணியாற்றியவர்.அதன் பிறகு தொடர்பில் இல்லை.பிறகு ஒருநாள் சாம்பசிவம் என்னை போனில் தொடர்புகொண்டு,’உங்கள் அலுவலகத்தில் பணியாற்றிய சந்தோஷ் சொன்ன கதை நன்றாக இருக்கிறது’ என என்னிடம் சொன்னார்.சந்தோஷ் திறமையானவர்தான்,படத்தை தயாரிக்கலாம் என நம்பிக்கை கொடுத்தேன்.அதன்பிறகு படத்தில் நடிக்கும் நடிகர்கள் தொடர்பான பரிந்துரையை கேட்டார்கள். நானும் வழங்கினேன்.
படத்தின் அனைத்துப்பணிகளும் நிறைவடைந்து ஃபர்ஸ்ட்லுக் வெளியிடும் முன் இயக்குநர் சந்தோஷ் என்னை சந்தித்து அதனை காண்பித்தார்.அப்போது டைட்டில் ‘அந்தரன்’ என்று இருந்தது.அவரிடம் நீ வேறு ஒரு டைட்டில்தானே வைத்திருந்தாய்.ஏன் மாற்றினாய் என்று கேட்டபோது,தயாரிப்பாளரின் தேர்வு என்று விளக்கம் அளித்தார்.உடனே தயாரிப்பாளரிடம் ஏன் இந்தப்படத்திற்கு அந்தரன் என பெயர் வைத்திருக்கிறீர்கள் என கேட்டேன்.பொதுவாக ஒரு திரைப்படத்திற்கு டைட்டில் வைத்தால் அது அனைவருக்கும் புரியவேண்டும்.ஒவ்வொருவருக்கும் டைட்டிலுக்காக விளக்கம் கொடுத்து கொண்டு இருக்கவேண்டாம் என்று சொன்னேன்.
அதற்கு அவர் குடும்பத்துடன் ஆலயத்திற்கு சென்று விருப்பசீட்டை போட்டு தேர்ந்தெடுக்கும்போது அதில் ‘அந்தரன்’ என்றுதான் வந்தது.இதனை என் மனைவிதான் தேர்வு செய்தார்கள்.அதனால் அந்த டைட்டிலை மாற்றஇயலாது என்று அன்பாக சொன்னார். நான் உடனே சிரித்துக்கொண்டே சரி என்று சொல்லிவிட்டேன்..
இந்த திரைப்படத்தை நான் பார்த்துவிட்டேன்.நல்லபடம்.கதையின் போக்கை யாராலும் இறுதிவரை கணிக்க இயலாத அளவிற்கு சுவராசியமாக இயக்குநர் படத்தை உருவாக்கியிருக்கிறார்.
இந்தப்படம் ஜூன் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.படம் நன்றாக இருந்தால் ஊடகங்களும்,இரசிகர்களும் கொண்டாடுவார்கள். இதற்கு என்னுடைய நிறுவனத்திலிருந்து வெளியான படைப்புகளே சாட்சி.அந்தவகையில் இந்தபடமும் நன்றாக இருக்கிறது.வெற்றிபெறும்,வெற்றிபெற வாழ்த்துகிறேன் என்றார்.
தயாரிப்பாளர் மு கி சாம்பசிவம் பேசுகையில்,
அடவி,மனிதர்கள் ஆகிய இரண்டு படங்களை தொடர்ந்து அந்தரன் என்னுடைய மூன்றாவது திரைப்படம்.படத்தில் பணியாற்றிய நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக்கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. தமிழ் சினிமாவின் யுனிவர்சிட்டி என போற்றப்படும் நண்பரும் , தயாரிப்பாளருமான சி வி குமார் மற்றும் விக்ரம்,சபரி, சாண்ட்ரா ஆகிய சிறப்புவிருந்தினர்களுக்கும் நன்றி.
தயாரிப்பாளர் சி வி குமார் ‘சூது கவ்வும்’ படத்தினை தயாரித்துக் கொண்டிருந்தபோது என்னை சந்தித்து நல்லதொரு கதை இருக்கிறது தயாரிக்கிறீர்களா என கேட்டார்.என்னிடம் பணம் இல்லை என்று சொன்னேன். பணத்தை யார் கேட்டார்கள்,படத்தை தயாரிக்கிறாயா எனக் கேட்டார்.சி வி குமாருக்கு நல்லகதை கிடைத்தால் போதும்.அதை படமாக உருவாக்குவார். அந்த அளவிற்கு அவர் திறமையானவர்.தமிழ்திரையுலகில் ஏராளமான புதுமுகங்களை அவர் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.ஒரு திரைப்படத்திற்கான கன்டென்ட் மற்றும் சரியான விஷயம் கிடைத்துவிட்டால் அவர் தயாரிப்பார். இந்தப்படம் உருவானதற்கும் அவர்தான் காரணம். அதனால் அவருக்கு சிறப்பு நன்றி.
இயக்குநர் கதையை சொன்னார்,அது எனக்கு பிடித்திருந்தது.அப்போது என்னிடம் பணம் இல்லை என்று சொன்னேன்.அதன்பிறகு எனக்கு ஒரு குழு அமைந்தது.நான் தயாரித்த இரண்டு திரைப்படங்களிலும் நல்லதொரு கன்டென்ட் இருந்தது.அதேபோல் இந்த திரைப்படத்திலும் சமூகத்துக்கு தேவையான ஒரு விஷயத்தை சொல்லி இருக்கிறோம்.அதனை ஒரு க்ரைம் திரில்லராக வழங்கியுள்ளோம்.திரைப்படத்தை திரையரங்குகளில் பார்த்துவிட்டு உங்களின் ஆதரவை வழங்குவீர்கள் என நம்புகிறேன்.
புதியவர்கள் ஒன்றிணைந்து ஒரு நல்லதொரு திரைப்படத்தை உருவாக்கினால் அதற்கு விநியோகஸ்தர்களும்,ஓடிடி உள்ளிட்ட வர்த்தகம் தொடர்பானவர்களும் ஆதரவை வழங்கவேண்டும் என இந்ததருணத்தில் ஒரு வேண்டுகோளாக முன்வைக்கிறேன்.புதியவர்களின் திரைப்படத்தை ‘நட்சத்திரங்கள் இல்லாத திரைப்படம்’ என புறக்கணிக்க வேண்டாம்.ஏனெனில் இன்றைய முன்னணி நட்சத்திரங்கள் அனைவரும் கடந்தகாலத்தில்
புதுமுகங்கள்தான் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன் என்றார்.
நடிகர் பிரஜின் பேசுகையில்,
இருபது ஆண்டு காலமாக ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமை என் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திவிடாதா என்ற எதிர்பார்ப்புடன் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறேன்.ஆனால் இந்த திரைப்படம் நிச்சயமாக வெற்றி பெறும்.ஏனெனில் தமிழ்இரசிகர்கள் நல்ல திரைப்படத்தை கொண்டாடுவார்கள்.
தயாரிப்பாளர் சாம்பசிவம் அவர்களின் மூன்றாவது திரைப்படம் இது.நல்லகதை.நல்லதொரு கருத்தை தேர்வு செய்திருக்கிறார்.இந்தப் படம் உங்களுக்கு வணிகரீதியான வெற்றியை தரவேண்டும்.தரும்.
நிறைய போராட்டங்களுக்கு இடையே நல்லதொரு படைப்பை மனதிற்கு நிறைவாக உருவாக்கியிருக்கிறோம். படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் இயக்குநர் முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைத்திருக்கிறார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் பலர் சென்றுள்ளனர்.பலரிடம் பழகி இருக்கிறேன்.அதில் விக்ரம் மற்றும் சபரி ஆகியோர் என்னுடைய நெருங்கிய நண்பர்கள்.நான் பிக்பாஸ் வீட்டில் விக்ரமுடன்தான் அதிகமாக சண்டை போட்டிருக்கிறேன்.யாருடன் நீங்கள் அதிகமாக நெருங்குகிறீர்களோ,அவர்களுடன்தான் உங்களுக்கு சண்டைவரும்.அந்த சண்டை மூலமாக வரும் நட்புதான், பிக்பாஸ் வீட்டிற்கு வெளியேயும் நீடிக்கும்.
இந்த திரைப்படம் இரசிகர்கள் கொடுக்கும் காசிற்கு தரமான படைப்பாக இருக்கும்.அவர்கள் செலவிடும் விலைமதிக்க முடியாத நேரத்திற்கு மதிப்பளிக்கும் வகையிலும் இந்தபடம் இருக்கும்.
ஜூன் 25ம் தேதி ‘அந்தரன்’ திரையரங்குகளில் வெளியாகிறது.அனைவரும் ஆதரவு தரவேண்டும்
இவ்வாறு அவர் பேசினார்.











