கேஜேஆர் அடுத்த எம்ஜிஆர் – படக்குழு நம்பிக்கை
நயன்தாராவின் அறம்,விஜய்சேதுபதியின் க/பெ ரணசிங்கம்,சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ, டாக்டர் மற்றும் அயலான் உள்ளிட்ட பல திரைப்படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் கதையின் நாயகனாக அறிமுகமாகும் படம் அங்கீகாரம்.இப்படத்தில்,சிந்தூரி விஸ்வநாத்,விஜி வெங்கடேஷ்,ஆண்டனி,ரங்கராஜ் பாண்டே,மன்சூர் அலிகான், மோகன்ராம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஜிப்ரான் இசையமைக்கும் இத்திரைப்படத்துக்கு ஒளிப்பதிவு ஏ.விஸ்வநாத்,சண்டைப் பயிற்சி பீட்டர் ஹெயின், படத்தொகுப்பு ஷான் லோகேஷ், கலை இயக்கம் ராமு தங்கராஜ், ஒலி வடிவமைப்பு சம்பத் ஆழ்வார், நடனம் ஷெரீப்.
இயக்குநர் பா.இரஞ்சித்திடம் துணை இயக்குநராகப் பணிபுரிந்த ஜே.பி.தென்பாதியான் இயக்கத்தில் உருவாகும் அங்கீகாரம் படத்தின் முதல்பார்வை கடந்த ஆண்டு வெளியானது.
இப்படத்தை ஸ்வஸ்திக் விஷன்ஸ் நிறுவனம் சார்பில் பிரசாந்த் – அஜித்பாஸ்கர் – அருண்முருகன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இப்படம் குறித்து நேற்று ஓர் அறிவிப்பு வெளியானது.அதில்,இப்படம் விரைவில் வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படம்,இம்மாதமே வெளியாகும் என்று முதலில் சொல்லப்பட்டது.ஆனால்,கதாநாயகனாக நடிக்கும் கேஜேஆருக்கு படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர்விபத்து காரணமாக சற்று தாமதமாகியிருக்கிறது என்கிறார்கள்.
இப்போது,இந்தப்படம் மே மாதம் மூன்றாவது அல்லது நான்காவது வாரத்தில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.
அடித்தட்டு வாழ்வில் இருக்கும் ஓர் இளைஞன் உத்வேகத்தோடு ஓட்டப்பந்தய வீரராகிறார்.பல கனவுகளோடு வரும் அவருக்கு அங்கு சரியான அங்கீகாரம் கிடைத்ததா? இல்லையா? என்பதைத்தான் இப்படம் பேசியிருக்கிறது என்கிறார்கள்.இதில்,வளரும் வீரர்கள் சந்திக்கும் அவலங்கள்,விளையாட்டுத்துறையில் நடக்கும் அட்டூழியங்கள் ஆகியனவற்றையும் பதிவு செய்திருக்கிறார்களாம்.
இந்த ஒற்றைவரிக்கதைக்குள் பல பரிணாமங்களை உள்ளடக்கி வலிமையான திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறாரம் ஜே.பி.தென்பாதியான்.
மெனக்கெட்டு உழைத்தால்தான் இந்தக் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாக இருக்கமுடியும் என்பதை உணர்ந்த நாயகன் கேஜேஆர்,கடும் பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு படத்தில் நடித்தாராம்.சண்டைக்காட்சிகளில் கூட டூப் எனப்படும் மாற்று நபரைப் பயன்படுத்தாமல் அவரே சண்டை செய்ததால் விபத்து ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள்.
கதாநாயகன் ஆகவேண்டுமென முடிவெடுத்தபோதே அதில் முழுமையான வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்கிற வெறியோடு உழைத்துக் கொண்டிருக்கிறார் என்று அந்தப்படக்குழுவினர் சொல்கிறார்கள்.
மேலும்,இந்த கேஜேஆர் எம்ஜிஆர் போல் புகழ்பெறுவார் என்கிறார்கள்.நாம் வியப்போடு பார்த்தால்,இது வெறும் புகழ்ச்சியில்லை அவருடைய அர்ப்பணிப்பைப் பார்த்த பிறகு சொல்லும் சொல் என்று மிக நம்பிக்கையாகச் சொல்கிறார்கள்.











