சினிமா செய்திகள்

விஜய்தான் நம்பர் 1 ரஜினி அஜீத் நம்பர் 2 – சர்ச்சைக்கு விஜய் விளக்கம்

நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக இருந்த பி.டி.செல்வகுமார்,அண்மையில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியொன்றில் பேசும் போது “விஜய் தான் எப்போதுமே நம்பர் 1. ரஜினி மற்றும் அஜித் எல்லாம் நம்பர் 2 தான்” என்று பேசினார். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சை உருவானது.

இது தொடர்பாக அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் புஸ்ஸி என்.ஆனந்து என்பவர் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில்….

முன்னாள் மக்கள் தொடர்பாளராக நீண்டகாலம் நல்ல விதமாகப் பணிபுரிந்தவர் தற்போது வேறு சில காரணங்களால் அப்பணியில், விஜய்யுடன் இல்லை என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வர கடமைப்பட்டுள்ளேன். மேலும், அவர், நமது மக்கள் இயக்கத்தில் யாதொரு பொறுப்பையும் இதுநாள் வரை வகிக்கவில்லை !

இருப்பினும், விஜய் பெயரைப் பயன்படுத்தி ஒரு சிலர், அவர்களது சொந்தக் கருத்தை, விஜய் கருத்தைப் போல் ஊடகங்களில் வெளியிடுவதை விஜய் ஏற்கவில்லை என்பதை இதன் மூலம் உறுதிப்படுத்த விரும்புகிறேன்.

அதோடு, விஜய் எந்த காலகட்டத்திலும், எச்சூழலிலும், சக நடிகர்களையோ, பொது மனிதர்களையோ, இழிவாக, தரம் தாழ்ந்தோ, ஒப்பிட்டுப் பேசியதில்லை ! அப்படி யாரையும் பேசச் சொல்லி யாருக்கும் விஜய் அதிகாரம் அளிக்கவில்லை என்பதை இந்நேரத்தில் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

ஆகவே, விஜய் குறித்த தகவல்களை, ஊடகங்களில் பேசுவது, விவாதிப்பது, பங்கேற்று கருத்து கூறுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவோரின் கருத்துகளை யாரும் நம்பவேண்டாம்

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Posts