ஜனநாயகன் வெளியீட்டில் அடுத்த சிக்கல் – படக்குழு அதிர்ச்சி
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் தணிக்கை வாரியம் சிக்கல் காரணமாக வெளியாகவில்லை.
அதனால், அந்தப்படத் தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றம் போனதும் அங்கு தீர்வு கிடைக்காததால் வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொண்டு மீண்டும் தணிக்கை வாரியத்தை அணுகியதும் அனைவரும் அறிந்த செய்தி.
இப்போது, தணிக்கை வாரியத்தின் மேல்முறையீட்டுக் குழுவினர் படத்தைப் பார்த்துவிட்டு மேலும் சில திருத்தங்களைச் செய்துவிட்டு சான்றிதழ் பெற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறதாம்.
இதனால், ஏப்ரல் 23 அன்று நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிந்தவுடன் அடுத்தநாளே அதாவது ஏப்ரல் 24 அன்றே ஜனநாயகன் வெளியாகும் என்றும், இல்லையில்லை, தேர்தல் முடிவு வெளியாகும் மே 4 வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் என்பதால் தேர்தல் முடிவுகள் வெளியான பினபு மே 7 ஆம் தேதி படம் வெளியாகும் என்றும் தகவல்கள் உலவிக்கொண்டிருக்கின்றன.
இதனால், இவ்விரண்டு தேதிகளில் ஏதாவதொரு தேதியில் படம் வெளியாகும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்கள் ஏமாந்து போகும் விதமாக கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் ஓர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
அந்நிறுவனம் இன்று காலை 11 மணியளவில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள கேடி தி டெவில் என்கிற படம் ஏப்ரல் 30 ஆம் தேதி வெளியாகும் என்று கூறியுள்ளது.
புகழ்பெற்ற கன்னட நடிகர் கிச்சா சுதீப், நடிகர் அர்ஜுனின் சகோதரி மகன் துருவ் சார்ஜா, இந்தி நடிகர் சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் அந்தப்படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவிருக்கிறது.
சுமார் இருநூறு கோடி முதலீட்டில் தயாராகி பான் இந்தியா படமாக அப்படம் வெளியாகிறது.
இதனால், அதற்கு ஒருவாரம் முன்பாக ஏப்ரல் 24 ஆம் தேதியோ அல்லது அதற்கு ஒருவாரம் பின்பு மே 7 ஆம் தேதியோ ஜனநாயகன் படத்தை கேவிஎன் நிறுவனம் வெளியிடாது.தங்களுடைய ஒரு பெரியபடத்தின் இன்னொரு பெரியபடத்தை வெளியிட்டு ஒருபடத்தின் வசூலை அவர்களே குறைத்துக் கொள்ள மாட்டார்கள்.
எனவே, தணிக்கை வாரியச் சான்று கிடைத்துவிட்டாலும் ஏப்ரல் 24 அல்லது மே 7 ஆகிய தேதிகளில் படம் வெளியாகாது என்பது உறுதியாகிவிட்டது.
இதனால், ஜனநாயகன் வெளியீட்டில் இப்படியெல்லாம் சிக்கல் வருகிறதே என அப்படம் சார்ந்தோர் வருந்திக் கொண்டிருக்கிறார்கள்.











