சத்யராஜ் தெலுங்குப் படங்களில் நடிக்கக் காரணம் ஒரு புத்தகம்
உதவி இயக்குநர்களிடையே வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டும் வகையில் சென்னை சாலிகிராமம், எண் 1, திலகர் தெருவில் எழுத்தாளர் அஜயன்பாலா பாலுமகேந்திரா நூலகத்தை
அமைத்திருக்கிறார்.
இதன் தொடக்கவிழா, ஏப்ரல் 14,2018 அன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டை கவிக்கோ மன்றத்தில் நடைபெற்றது.
நடிகர் சத்யராஜ், இயக்குநர்கள் ஏ.எல்.விஜய், வெற்றிமாறன், ராம், சுப்ரமணிய சிவா, மீரா கதிரவன், நடிகை ரோகிணி எழுத்தாளர் பாமரன் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய நடிகர் சத்யராஜ்,
கடலோரக்கவிதைகள் படத்தைப் பார்த்து விட்டு சிவாஜி என்னை அடுத்த பத்து வருடங்களுக்கு உன்னை யாரும் அசைச்சிக்க முடியாது என்றார் வேதம் புதிது பார்த்துவிட்டு எம் ஜி ஆர் கையைப்பிடித்து முத்தம் கொடுத்தார் ஓன்பது ரூபாய் நோட்டு பார்த்துவிட்டு பாலுமகேந்திரா கட்டிப்பிடித்துக் கண்கலங்கிப் பாராட்டினார்.
அஜயன்பாலா எழுதிய மார்லன் பிராண்டோ புத்தகத்தைப் படித்த பிறகுதான், மொழி தெரியாத படங்களிலும் நடிக்கலாம் என தெரியவந்தது. அதுவரை நடிக்க மறுத்த தெலுங்குப் படங்களில் நடிக்க ஆரம்பித்தேன். நன்றாக சம்பாதித்தேன். அதற்குக் காரணமாயிருந்தவர் அஜயன்பாலா.
அவர் உருவாக்கியிருக்கிற இந்த நூலகத்துக்கு பெரிதாக உதவி செய்ய நினைக்கிறேன். கூடியவிரைவில் அறிவிப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.











