சினிமா செய்திகள்

பராசக்தி படமும் தள்ளிப் போகிறது? – பரபரப்பு தகவல்

2026 தைப் பொங்கல் நாளையொட்டி விஜய் நடித்த ஜனநாயகன்,சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி ஆகிய இரண்டு படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

சனவரி 9 ஆம் தேதி ஜனநாயகன் வெளியாகுமென்றும் சனவரி 10 ஆம் தேதி பராசக்தி வெளியாகுமென்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இவற்றில்,ஜனநாயகன் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் தராமல் தனிக்கை வாரியம் இழுத்தடிப்பதாகக் குற்றம் சாட்டி, உடனே தணிக்கைச்சான்று வழங்க உத்தரவிடக் கோரி அப்படத்தைத் தயாரித்திருக்கும் கேவிஎன் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

சனவரி 6,7 ஆகிய இரண்டு நாட்கள் விசாரணைக்குப் பின் இன்று (சனவரி 9) காலை பத்தரை மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே சனவரி 7 அன்று இரவே,ஜனநாயகன் படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது.

இந்நிலையில், சனவரி 10 ஆம் தேதி பராசக்தி படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இப்போது அதிலும் சிக்கல் நேர்ந்திருப்பதாக அதிர வைக்கும் தகவல் உலவிக் கொண்டிருக்கிறது.அப்படத்துக்கும் தணிக்கை வாரியத்தால்தான் சிக்கல் என்றும் சொல்லப்படுகிறது.

தமிழ்நாட்டில் 1965 ஆம் ஆண்டு நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள அந்தப்படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு, மறு ஆய்வுக்குழுவுக்குப் பரிந்துரைத்துவிட்டது.

நடிகை ஜீவிதா தலைமையில் இயங்கும் மறு ஆய்வுக்குழு, இந்தப்படத்தை சனவரி 5 ஆம் தேதியன்று பார்த்துவிட்டு, படத்தில் சில காட்சிகளில் வெட்டு,சில இடங்களில் மியூட் எனப்படும் வசன அமைதி மற்றும் பல இடங்களில் திருத்தம் ஆகியன சொல்லப்பட்டிருக்கிறதாம்.சுமார் 135 இடங்களில் அம்மாதிரி செய்தாக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறதாம்.
மறு ஆய்வுக்குழு சொன்னவற்றைச் செய்து மீண்டும் படத்தைக் காட்டிய பிறகே சான்றிதழ் கிடைக்கும் எனும் நிலை.

இதனால் படக்குழுவினர் இரவு பகலாக வேலை பார்த்து மறு ஆய்வுக்குழு சொன்னவற்றைச் செய்து படத்தைத் திரும்பப் போட்டுக் காட்டுவதில் நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக தாமதம் ஏற்பட்டிருக்கிறதென்று சொல்லப்படுகிறது.

இதனால்,இன்றைக்குள் தணிக்கைச் சான்று கிடைக்காது என்று சொல்லப்படுகிறது.

இதை உணர்ந்து படத்தின் வெளியீட்டை முன்பே சொன்னதுபோல் சனவரி 14 ஆம் தேதி வைத்துக் கொள்ளலாம் அல்லது தை முதல்நாளான சனவரி 15 அன்று வெளியிடலாம் என்று தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருப்பதாகத் தகவல் உலவுகிறது.

தயாரிப்பு நிறுவனம் இதுகுறித்து எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.

Related Posts