சூரரைப் போற்று வெளியீடு தாமதம் – சூர்யா அறிக்கையால் எழும் கேள்விகள்
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ‘சூரரைப் போற்று’ வெளியீடு தள்ளிப் போவதாக நடிகர் சூர்யா நேற்று (அக்டோபர் 22) அறிவித்தார். அது குறித்து நடிகர் சூர்யா ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது….
என்னுடைய எண்ணங்களை உங்களிடம் வெளிப்படுத்த எப்போதும் கடிதங்களை நான் தேர்ந்தெடுப்பதில்லை. ஆனால் இது போன்ற கடினமான காலகட்டத்தில், திறந்த மனதுடனும், வெளிப்படைத்தன்மையுடனும் நான் உங்கள் முன் நின்று கொண்டிருக்கும் நிலை உருவாகியுள்ளது. ஏனெனில் நான் இப்போது இருக்கும் நிலைக்கு வர என்னுடன் உறுதுணையாக நின்றது நீங்கள்தான்.
நாங்கள் ‘சூரரைப் போற்று’ படத்தைத் தொடங்கிய போது புது இடங்களில் படப்பிடிப்பு நடத்துவது, பல்வேறு மொழி பேசும் மக்களுடன் பணிபுரிவது, மாறாவின் உலகத்துக்குள் பலவகையான திறன்களை கொண்டவர்களை கொண்டு வருவது ஆகிய விஷயங்கள் மட்டுமே சவாலாக இருக்கும் என்று நினைத்தோம். சொல்வதற்கு எளிதாக இருந்தாலும், இதைச் செயல்படுத்துவது பூதாகரமாக இருந்தது.
‘சூரரைப் போற்று’ திரைப்படம் விமானத் துறையை பற்றியது என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே இது நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விசயம் எனபதாலும், உண்மையான விமானப் படை விமானங்களையும் பயன்படுத்தியதாலும் நாங்கள் ஏராளமான அனுமதிகளைப் பெற வேண்டியிருந்தது. இன்னும் சில அனுமதிகள் நிலுவையில் இருப்பதால், இது போன்ற தருணத்தில நாட்டின் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு இப்படத்துக்கான காத்திருப்பு தவிர்க்க முடியாததாக ஆகிறது.
நம் இதயத்துக்கு நெருக்கமான ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் கதை ஈர்க்கக் கூடியதாகவும், ஆர்வத்தைத் தூண்டக் கூடியதாகவும் உள்ளது. துரதிர்ஷ்டவசமாக, இப்படத்தின் வெளியீடு தாமதமாகிறது.
எனினும், என்னுடைய நலம் விரும்பிகள் இப்படத்தை எவ்வளவு ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள், ஆனால் எங்களிடம் வேறு மாற்றுவழி இல்லை என்பதை நினைக்கையில் வலிக்கிறது. என்னுடைய நலம் விரும்பிகள் இதை அன்புடனும், நம்பிக்கையுடனும் நேர்மறையாக எடுத்துக் கொள்வார்கள் என்று தனிப்பட்ட முறையில் நம்புகிறேன்.
விரைவில் ட்ரெய்லர் மற்றும் இன்னபிற விஷயங்களுடன் உங்களிடம் வருகிறோம்.
இவ்வாறு சூர்யா கூறியுள்ளார்.
சூர்யாவின் இந்த அறிக்கையைத் தொடர்ந்து பல கேள்விகள் எழுகின்றன.
அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாகவேண்டிய படம் தள்ளிப் போகிறதென அக்டோபர் 22 ஆம் தேதியே அதாவது எட்டுநாட்களுக்கு முன்பே அறிவித்திருக்கிறார் சூர்யா.
இந்த எட்டுநாட்கள் மட்டுமின்றி படம் தயாராகி கிட்டத்தட்ட ஓராண்டுக்கு மேல் ஆகியும் இன்னும் தடையில்லாச் சான்றுகள் பெறாமல் இருப்பது ஏன்?
ஜூன் மாதம் இப்படம் தணிக்கை செய்யப்பட்டு யு சான்றிதழ் கிடைத்திருப்பதாக படக்குழு தெரிவித்திருந்தது. தடையில்லாச் சான்றுகளைச் சமர்ப்பிக்காமல் தணிக்கைச் சான்று கிடைத்தது எப்படி?
நேரடியாக இணையதளத்தில் வெளீயிட தணிக்கைச்சான்றே தேவையில்லை எனும்போது தடையில்லாச் சான்று எப்படி அவசியமாகிறது?
இப்படிப் பல கேள்விகள் எழுந்திருக்கின்றன.