சினிமா செய்திகள்

பாலா இயக்கத்தில் நடிக்கிறேன் – சூர்யா அறிவிப்பு

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சூர்யா. இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பும் நிறைவடைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

அப்படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிக்கவிருக்கும் படம் எதுவென்பது பெரிய கேள்விக்குறியாக இருந்தது.

கலைப்புலி தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல்,சொந்தத் தயாரிப்பில் பாலா இயக்கத்தில் ஒரு படம்,ஸ்டுடியோகிரின் நிறுவனத்துக்காக சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படம் ஆகியவற்றில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இவற்றில் பாலா இயக்கும் படம் பற்றி எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வராமல் இருந்தது.

சூர்யாவின் தந்தை நடிகர் சிவகுமாரின் எண்பதாவது பிறந்தநாளையொட்டி நேற்று நடந்த கொண்டாட்டத்தில் பாலா கலந்து கொண்டார்.

அப்போது அவர்கள் இருவருடனும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தோடு, இன்று (அக்டோபர் 28,2021) சூர்யா வெளியிட்ட டிவிட்டர் பதிவில்…

என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர்…
ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர்..
20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான்…
அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்…
அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன்…

என்று கூறியுள்ளார்.

பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார் என்பதன் முதல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இது. நந்தா, பிதாமகன் ஆகிய படங்களுக்குப் பிறகு மீண்டும் பாலாவும் சூர்யாவும் இணைகிறார்கள் என்பதால் இதைக் கொண்டாடிவருகிறார்கள்.

Related Posts