இயக்குநர் ஷங்கர் அனுப்பிய வக்கீல் நோட்டிஸ் – திரையுலகம் வியப்பு
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் இந்தியன் 2. லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் 2018 ஆம் ஆண்டே தொடங்குவதாகச் சொல்லப்பட்டது. பல்வேறு தடைகள் தாண்டி 2019 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது.
2020 பிப்ரவரி 19 ஆம் தேதி இந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் நடந்த கொடூர விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.அதனால் அப்படத்தின் படப்பிடிப்பு தடைபட்டது.
அதன்பின் கொரோனா சிக்கல் வந்துவிட்டது.
கொரோனா சிக்கலுக்குப் பின், படப்பிடிப்புக்குப் பின்பான பணிகள் தொடங்கலாம் என்று அரசு அனுமதியளித்ததும் இந்தியன் 2 படத்தின் பணிகளும் தொடங்கின.
அதன்பின் செப்டெம்பர் 1 முதல் படப்பிடிப்பு நடத்தலாம் என்று அனுமதி அளித்த பின்பும் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்குவதற்கான எந்த அறிகுறியும் இல்லை.
கமல் பிக்பாஸ் நிகழ்சிக்குப் போவதால் இந்தியன் 2 படப்பிடிப்பு தள்ளிப்போகிறது என்றார்கள்.
இந்நிலையில்,பிக்பாஸ் வேலைகளுக்கு நடுவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கவிருக்கும் படத்தின் புகைப்படப் படப்பிடிப்பு நடந்தது.
இம்மாத இறுதி அல்லது நவம்பர் முதல்வாரத்தில் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இது இப்படியிருக்க, இன்னொரு பக்கம் இயக்குநர் ஷங்கர், லைகா நிறுவனத்துக்கு வக்கீல் நோட்டிஸ் அனுப்பியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அதில், இந்தியன் 2 படத்துக்காக சுமார் இரண்டரை ஆண்டுகள் உழைத்திருக்கிறேன். இந்தியன் 2 படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடத்துவது குறித்து எந்தத் தகவலும் இல்லை. கமல் அடுத்த படத்துக்குப் போய்விட்டார். நான் மட்டும் சும்மாவே உட்கார்ந்திருக்க முடியாது. எனவே இரண்டு வாரங்களுக்குள் இந்தியன் 2 தொடங்குவது குறித்து உரிய விடை கிடைக்கவில்லையென்றால் நான் வேறு படத்துக்குப் போவேன் என்று சொல்லியிருக்கிறாராம்.
இரக்சியமாகக் கிசுகிசுக்கப்படுகிற ஷங்கரின் இந்த அதிரடியால் திரையுலகில் ஆச்சரியம் நிலவுகிறது.











