சினிமா செய்திகள்

சுந்தர்.சி க்கு பதிலாக ரஜினியை இயக்கும் இயக்குநர் – புதிய தகவல்

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் படத்தை சுந்தர்.சி இயக்குகிறார் என்று நவம்பர் 5 ஆம் தேதி அறிவித்தார்கள்.இந்த அறிவிப்பு வெளியான ஒரு வாரத்தில் அதாவது நவம்பர் 13 அன்று அந்தப்படத்திலிருந்து விலகிக் கொள்வதாக சுந்தர்.சி அறிவித்துவிட்டார்.

கதையில் தலையீடு இருந்ததால் அவர் விலகிக் கொண்டார் என்று சுந்தர்.சி தரப்பில் சொல்லப்பட்டது.இதுதொடர்பாக கமல் கொடுத்த பேட்டியில், ரஜினிக்குக் கதை பிடிக்கவில்லை என்று சொல்லியிருந்தார்.

இவை இரண்டிலும் உண்மையில்லை, சுந்தர்.சியின் சம்பளம் மற்றும் மொத்தச் செலவுத் தொகை குறித்து இயக்குநர் தரப்புக்கும் தயாரிப்புத் தரப்புக்கும் பெரிய இடைவெளி இருந்ததே இந்தப் பிரிவுக்குக் காரணம் என்றொரு தகவலும் உணடு.

எது எப்படியோ? சுந்தர்.சி விலகியது உண்மை என்பதும் அவருக்குப் பதிலாக வேறொரு இயக்குநரைத் தேடுகிறார்கள் என்பதும் உண்மை என்றார்கள்.

அன்றிலிருந்து ரஜினியை இயக்கப்போகும் இயக்குநர் இவர்தான் என்று நாள்:ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகச் செய்திகள் வந்து கொண்டேயிருந்தன.ஆனால் அவை எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இப்போது இயக்குநரை முடிவு செய்துவிட்டார்களாம்.

பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் தான் ரஜினி நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறாராம்.

பார்க்கிங் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது படத்தை அவர் இயக்குவதாகவும் அந்தப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆனால்,யாரும் எதிர்பாராவிதமாக டான் பிக்சர்ஸ் நிறுவனத்தில் அமலாக்கத்துறை புகுந்ததால் இந்தப் படத்தின் படப்பிடிப்பைத் திட்டமிட்டபடி தொடங்கமுடியாத நிலை. அதனால் எல்லாம் மாறிவிட்டது.

சிம்பு, வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நடிக்கப் போய்விட்டார்.அந்தப்படத்தை முடித்துவிட்டுத்தான் அடுத்த படத்துக்குப் போகவேண்டும்.அதற்குப் பல மாதங்கள் ஆகும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விசயம்.

இந்நிலையில் அடுத்தது சிம்பு படம் பெரிய செலவு பிடிக்கும் படம் சிறப்பாகச் செய்யலாம் என்று எண்ணியிருந்த ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு அதிர்ச்சி.

என்ன செய்வதெனத் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த நேரத்தில், ராஜ்கமல் நிறுவனத்திலிருந்து அழைப்பு.ரஜினியை வைத்துப் படம் இயக்கவேண்டும் என்று கோரிக்கை.

இதனால் மிக மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டாராம் ராம்குமார் பாலகிருஷ்ணன்.

இப்போது ராஜ்கமல் நிறுவனத்தின் அலுவலகத்தில் அமர்ந்துவிட்டார்.ஒப்புதல் வாங்கிய மையக்கதைக்கு திரைக்கதை எழுதுகிறார்.

முழுமையான திரைக்கதையை ரஜினியும் கமலும் ஏற்றுக்கொண்டதும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.அதற்கு இன்னும் சில வாரங்கள் ஆகும்.

Related Posts