சினிமா செய்திகள்

கைவிட்டுப் போனது ட்யூட் – நடந்தது என்ன?

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்.ஐ.கே மற்றும் ட்யூட் ஆகிய படங்கள் தயாராகிவருகின்றன.இவற்றில், முதலில் ‘ட்யூட்’ படம் தீபாவளி வெளியீடு என அறிவிக்கப்பட்டது.அதேநேரம், ‘எல்.ஐ.கே’ படமும் தீபாவளி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டது. இதனால் ‘ட்யூட்’ படம் டிசம்பருக்கு ஒத்திவைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.ஏனெனில் ஒரு கதாநாயகன் நடித்த இரண்டு படங்களை ஒரேநாளில் வெளியிட்டால் இரண்டு படங்களுக்கும் நல்லதல்ல என்பது விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களின் கருத்து.

இதனால் ட்யூட் படமா எல் ஐ கே படமா என்கிற கேள்வி இருந்தது. அதற்கு விடை சொல்வது போல,தொடர்ந்து அடுத்தடுத்த அறிவிப்புகள் மூலம் ட்யூட் படம் தீபாவளி வெளியீடு என்பதை உறுதிப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள்.

அதேசமயம், தீபாவளி வெளியீடு என்று அறிவித்ததோடு சரி, அதன்பின் பாடல் வெளியீடு உட்பட எந்த அறிவிப்பையும் எல் ஐ கே படக்குழு வெளியிடவில்லை.

இதனால், தீபாவளிக்கு ட்யூட் மட்டுமே வெளியாகும் என்பது உறுதியாகியிருக்கிறது என்கிறார்கள்.

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிடும் வண்ணம் தயாராகியிருக்கும் படம் ட்யூட்.இதன் தமிழ்நாடு வெளியீட்டில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் பெற்றிருந்தார்.சுமார் இருபத்து மூன்று கோடி கொடுப்பதாகச் சொல்லி அந்த உரிமையை அவர் பெற்றார் என்று சொல்லப்பட்டது.

இப்போது அப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை ராகுலிடமிருந்து படநிறுவனம் திரும்பப் பெற்றுக் கொண்டதாம்.

ஏனெனில், அதற்காகக் கொடுப்பதாகச் சொன்ன தொகையை சில தவணைகளில் தருவதாகச் சொன்ன ராகுல் சொன்னபடி செய்யவில்லை என்றும் அதனால் அவருக்குப் பலமுறை நினைவூட்டியும் தொகையைச் சரியாகச் செலுத்தவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

இதனால், அதிரடியாக ராகுலிடமிருந்து அந்த உரிமையை படநிறுவனம் திரும்பப் பெற்றுக்கொண்டது என்கிறார்கள்.

இப்போது, அந்தப் படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையைப் பெற ஏஜிஎஸ் நிறுவனம் தீவிரமாக முயன்று வருகிறதாம்.

அந்நிறுவனத்தின் தயாரிப்பில் இரண்டு படங்கள் செய்திருப்பதோடு இன்னுமொரு படமும் செய்யவிருக்கும் ட்யூட் படத்தின் கதாநாயகன் பிரதீப் ரங்கநாதனின் ஆதரவு ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு இருக்கிறதாம்.

அதனால், விலை குறித்த விசயங்கள் முன்பின்னாக இருந்தாலும் ட்யூட் படத்தின் தமிழ்நாடு உரிமை ஏஜிஎஸ் நிறுவனத்திடமே கொடுக்கப்படும் என்றும் அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்றும் சொல்கிறார்கள்.

Related Posts