லக்கிபாஸ்கர் – ராக்போர்ட் முருகானந்தம் அடித்த ஜாக்பாட்
இவ்வாண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடித்த அமரன்,ஜெயம்ரவி நடித்த பிரதர் கவின் நடித்த ப்ளடிபெக்கர் ஆகிய நேரடித் தமிழ்த் திரைப்படங்களோடு துல்கர்சல்மான் நடித்த லக்கிபாஸ்கர் மொழிமாற்றுப் படமும் வெளியானது.
தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள திரைப்படம் லக்கி பாஸ்கர் படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. மீனாட்சி சவுத்ரி, ராம்கி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் முருகானந்தம் பெற்றிருந்தார்.
அமரன் மற்றும் பிரதர் ஆகிய படங்களை ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்டதால் அப்படங்களுக்கு அதிக மற்றும் முக்கிய திரையரங்குகள் கிடைத்தன. தீபாவளிக்கு முன்பாக இப்படத்துக்குத் திரையரங்குகள் கிடைப்பது சிரமமாக இருக்கிறது என்று சொன்னார்கள்.சில பெரிய நகரங்களில் ஒரு திரையரங்கம் கூடக் கிடைக்காமல் சில காட்சிகள் திரையிட வேண்டிய நிலை இருந்ததாம்.
அப்படிப்பட்ட நிலையில் சுமார் நூற்றைம்பது திரையரங்குகளில் இப்படத்தை வெளியிட்டனர்.
படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. நான்கு நாட்கள் கடந்த பின்னும் நேற்றைய வேலை நாளிலும் அரங்குகள் பெரும்பகுதி நிறைந்திருந்தது என்று சொல்கிறார்கள்.
அதோடு வெளியிட்ட நாளைவிட இப்போது சுமார் ஐம்பது திரையரங்குகள் கூடுதலாகக் கிடைத்துள்ளன.இது இந்த வாரத்தில் மேலும் அதிகரித்து மொத்தம் இருநூற்றைம்பது திரையரங்குகளில் படம் திரையிடப்படும் என்று சொல்லப்படுகிறது.
இப்படம் வெளியாகி முதல் நான்கு நாட்களில், இப்படம் உலக அளவில் ரூ.55.4 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலும் இப்படம் நல்ல வசூலைப் பெற்றுவருகிறது.இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை சுமார் இரண்டரை கோடி கொடுத்து ராக்போர்ட் முருகானந்தம் பெற்றார் என்று சொல்லப்பட்டது.
இப்போது இப்படத்துக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பையும் வசூலையும் பார்க்கும் போது சுமார் எட்டிலிருந்து பத்து கோடி வரை தயாரிப்பாளரின் பங்காகக் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
பெரிய நடிகர்கள் பெரிய இயக்குநர்களின் படங்களை வெளியிட்டு பொருளிழப்பைச் சந்தித்திருந்த ராக்போர்ட் முருகானந்தத்துக்கு இந்தப்படம் ஒரு ஜாக்பாட் என்று திரையுலக வியாபார வட்டாரங்களில் கூறுகிறார்கள்.











