லோகேஷ் இயக்கத்தில் கமல் ரஜினி – அதிர வைக்கும் புதிய தகவல்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கூலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசும்போது, இந்தப்படத்தில் இன்னொரு சிறப்புத் தோற்றத்தில் ஒரு முக்கிய நடிகர் நடிக்கிறார் என்று லோகேஷ் சொன்னார்.எனக்கு சட்டுனு மைண்ட்ல உலகநாயகன் என்று போகுது.இவர் அவரோட இரசிகர் அவரோட படமும் பண்ணியிருக்கிறார்,அவரிடம் பேசி நடிக்க வைக்கப்போகிறாரோ என நினைத்து ஆகா என பறக்கிறேன் என்று பேசினார்.
அவருடைய ஆசை நிறைவேறப் போவதாக ஒரு தகவல் திரையுலக வட்டாரத்தில் பரபரத்துக் கொண்டிருக்கிறது.
ஆம், லோகேஷ் கனகராஜ் இப்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார்.அடுத்து அந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.
அந்தப்படம் முடிவடைந்த பிறகு,கார்த்தி நடிக்கும் கைதி 2 படத்தை இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது.
ஆனால் இப்போது அதில் அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளதாம்.லோகேஷ் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் கைதி 2 முன்பாக இன்னொரு படத்தை இயக்கவிருக்கிறார் என்பதுதான் அந்த மாற்றம் என்கிறார்கள்.
அந்தப்படத்தில் கமல், ரஜினி ஆகிய இருவரும் இணைந்து நடிக்கவிருக்கிறார்களாம்.இருவரும் இணைந்து நடிப்பதற்கேற்ற ஒரு கதையை லோகேஷ் கனகராஜ் சொன்னதாகவும் அதை இருவரும் ஏற்றுக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு, தான் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை ஒட்டி ரஜினியின் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்தார் கமல்.அந்தச் சந்திப்பு அதற்காக மட்டுமல்ல இந்தப்படத்தை உறுதி செய்வதற்காகவும்தான் என்று சொல்கிறார்கள்.
அதன்பின், நடிகர் கார்த்தி மற்றும் கமல் சந்திப்பும் நடந்தது.அப்போது கைதி 2 படத்துக்கு முன்பாக இந்தப்படத்தை எடுப்பது தொடர்பாக அவரிடம் சொல்லி அவருடைய சம்மதத்தையும் பெற்றதாகச் சொல்கிறார்கள்.
திரையுலகம்,திரைப்பட இரசிகர்கள் ஆகிய அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கவிருக்கும் இந்தப்படத்தை, கமலின் ராஜ்கமல் நிறுவனமே தயாரிக்கவிருக்கிறதாம்.விக்ரம் படத்துக்கு முன்னதாகவே லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது என்றொரு தகவல் உலா வந்தது.ஆனால் சில காரணங்களால் அப்போது அந்தப்படம் நடக்கவில்லை.
இப்போது அந்தத் தகவலுக்கு உயிர் வந்துவிட்டது என்றும் இது தொடர்பான அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.
திரையுலக மேல் மட்டங்களில் உலாவரும் இந்தத் தகவல் உண்மையாக அறிவிக்கப்படும் பட்சத்தில் தமிழ்த் திரையுலகம் மட்டுமின்றி இந்தியத் திரையுலகமே அதிரும் என்பது மட்டும் உறுதி.











