எம்.ராஜேஷ் மறுப்பு ஆர்.பி.செளத்ரி வெறுப்பு – ஜீவாவின் புதிய பட தகவல்
நடிகர் ஜீவா இப்போது இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஒரு படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.இன்னொரு படத்தின் படப்பிடிப்பு தொடங்கி சில நாட்கள் மட்டும் நடந்திருக்கிறது.அப்படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
இதனிடையே,எம்.ராஜேஷ் இயக்கும் புதிய படமொன்றில் நடிக்க ஜீவா ஒப்புக்கொண்டிருக்கிறார்.அந்தப்படம் 2009 ஆம் ஆண்டு இவர்கள் கூட்டணியில் வெளியான சிவா மனசுல சக்தி படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
இந்தப்படத்தை,சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பிலேயே தயாரித்துவிடலாம் என்று ஆர்.பி.செளத்ரி சொல்லியிருக்கிறார்.ஆனால் அந்நிறுவனத்தில் படம் இயக்க மறுத்துவிட்டாராம் இயக்குநர் எம்.ராஜேஷ்.அதற்குக் காரணம், அந்நிறுவனத்துக்குப் படம் இயக்கினால் சம்பளம் மிகவும் குறைவாகப் பேசுவார்கள்.அதிலும் அந்நிறுவனத்தைச் சேர்ந்த ஜீவாவே நாயகன் எனும்போது வலியுறுத்தி அதிகச் சம்பளம் கேட்கவியலாது என்பதால் வேறு தயாரிப்பு நிறுவனத்தைத் தேடியிருக்கிறார் இயக்குநர் எம்.ராஜேஷ்.
அவருடைய தேடலில் கிடைத்த நிறுவனம், எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம்.இதன் சார்பில் வி.மதியழகன் இப்படத்தைத் தயாரிக்கவிருப்பதாகவும் அவருக்குப் பின்புலமாக மலேசிய பிரபலம் மாலிக் இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.இவர்கள் முன்னெடுப்பில் அந்தப்படத் தயாரிப்புப் பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன.
இதையறிந்த பலர் எம்.ராஜேஷ் செய்வது சரியல்ல என்கிறார்கள்.மற்றவர்கள் சொல்வதெல்லாம் இருக்கட்டும் நாயகன் ஜீவா என்ன சொல்கிறார் என்றால்? அவர் இயக்குநர் எடுப்பதே இறுதி முடிவு அவர் என்ன முடிவெடுத்தாலும் எனக்குச் சம்மதம் என்று சொல்லிவிட்டாராம்.
இவற்றை அறிந்த தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி மிகவும் வருத்தப்பட்டிருக்கிறார்.ஒரு படத்தை நான் தயாரிக்கிறேன் என்று சொல்லியும் அதை ராஜேஷ் மறுக்கிறார் அதற்கும் மகனும் ஒத்துழைக்கிறார் என்பதுதான் அவருடைய வருத்தத்துக்குக் காரணம் என்கிறார்கள்.
இதையறிந்த திரைத்துறையினர் பலர், மதியழகன் நிறைய சிக்கல்களில் இருப்பவர்,அவர் தயாரித்த படங்கள் வெளியாகும் நேரத்தில் பல பிரச்னைகள் வரும்.எந்தச் சிக்கலும் இல்லாமல் படம் வெளியானது மிகக் குறைவு.அப்படிப்பட்டவரிடம் போய் மாட்டிக் கொள்கிறாரே? என்று சொல்கிறார்கள்.
சூப்பர்குட் நிறுவனத்தில் படம் எடுத்தால் கண்டிப்பாக அந்தப்படம் வெளியாகிவிடும் என்பது எல்லோருக்கும் தெரியும்.அப்படியிருக்கும் போது அந்நிறுவனத்தை எம்.ராஜேஷ் புறக்கணித்தது தப்பு என்றும் சொல்கிறார்கள்.
என்ன நடக்கப் போகிறதெனப் பொறுத்திருந்து பார்ப்போம்.











