சினிமா செய்திகள்

ரஜினியைச் சந்திக்கிறார் மணிரத்னம்

தமிழின் முக்கியமான புதினங்களில் ஒன்று கல்கியின் பொன்னியின்செல்வன். அது திரைப்படமாக உருவாகியிருக்கிறது.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படத்தை மணிரத்னம் இயக்கியுள்ளார்.

இப்படத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா உட்பட பலர் நடித்துள்ளனர்.

இரண்டு பாகங்களாகத் தயாராகியிருக்கும் இப்படத்தின் முதல்பாகம் இவ்வாண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் குறுமுன்னோட்டத்தைக் கதைக்களமான தஞ்சாவூரில் வைத்து வெளியிடவிருக்கிறார்கள். தஞ்சை பெரிய கோயிலில் எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி இல்லை என்பதால் கோயிலுக்கு அருகே உள்ள அரங்கமொன்றில் அந்நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது.

அதைத் தொடர்ந்து செப்டம்பர் 7 ஆம் தேதி இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டுவிழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கவிருக்கிறதாம்.

அந்நிகழ்வைப் மிகப்பெரிய அளவில் நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்களாம். நிகழ்ச்சியில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் அமிதாப் உள்ளிட்டோரைக் கலந்துகொள்ள வைக்கத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

இதற்காக, கமல் மற்றும் ரஜினியை அழைக்கும் பொறுப்பை மணிரத்னமே ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்றும் விரைவில் அவர்களைச் சந்தித்து அழைப்பு விடுப்பார் என்றும் சொல்லப்படுகிறது.

முக்கியமான கதை, முன்னணி நடிகர்கள், பெயர் பெற்ற இயக்குநர், மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம் ஆகிய அனைத்தும் இருந்தும் ஒரு படத்தைப் பெரிதாக்க எவ்வளவு உழைக்கவேண்டியிருக்கிறது பாருங்கள்.

Related Posts