சினிமா செய்திகள்

ஒரு ரூபாய்கூட சம்பளம் வாங்காமல் நடிக்கும் விஷால் – 35 ஆவது பட விவரம்

நடிகர் விஷால் நடிப்பில் இவ்வாண்டு ஜனவரியில் வெளியான படம் மதகஜராஜா.அது பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட படம்.அதற்கு முன்பு விஷால் நடிப்பில் வெளியான படம் ரத்னம்.2024 ஏப்ரலில் அப்படம் வெளியானது.அதன்பின் அவருக்குப் படம் எதுவும் இல்லை.

இந்நிலையில் ஜூலை 14 அன்று அவர் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அப்படம் தொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

விஷால் நடிக்கும் 35 ஆவது படமாக இத்திரைப்படம் தயாராகிறது. இப்படத்தை தயாரிப்பாளர் திரு.ஆர்.பி.சௌத்ரி அவர்கள் தயாரிப்பில் உருவாக உள்ளது.

திரு.ஆர்.பி.சௌத்ரி அவர்கள் 1990 ஆம் வருடம் புது வசந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் சூப்பர்குட் பிலிம்ஸ் என்ற நிறுவனம் துவங்கி தொடர்ந்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்தது மட்டுமில்லாமல் பல புதுமுக  இயக்குநர்களை அறிமுகம் செய்த பெருமையையும் இந்த நிறுவனம் பெற்றுள்ளது.

இத்திரைப்படம் ஆர்.பி.செளத்ரி அவர்களின் தயாரிப்பில் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் 99 ஆவது திரைப்படமாக உருவாக உள்ளது.

இயக்குநர் ரவி அரசு இயக்கும் இந்தப் படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற உள்ளார்.

முதல்முறையாக நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ரவி அரசு கூட்டணியில் இந்தப்படம் உருவாக இருக்கிறது. 
மதகஜராஜாவின் மாபெரும் வெற்றிக் கூட்டணிக்குப் பிறகு மீண்டும் நடிகர் விஷால் மற்றும் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதன் இணைகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தொகுப்பை என்.பி.ஶ்ரீகாந்த் கவனிக்க துரைராஜ் கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார். மார்க் ஆண்டனி வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் நடிகர் விஷால் உடன் இணைகிறார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார்.

விஷாலுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். இதில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தின் பூஜை இன்று காலை (ஜூலை 14,2025) மிகச்சிறப்பாக சூப்பர் குட் ஃபிலிம்ஸ் அலுவலகத்தில் நடைபெற்றது. 

இந்த விழாவில் நடிகர்கள் கார்த்தி, தம்பி ராமையா, அர்ஜெய், இயக்குநர் வெற்றிமாறன், மணிமாறன், சரவண சுப்பையா,எம்.சரவணன், மோகன், விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம், ஒளிப்பதிவாளர் ஆர்தர் ஏ.வில்சன், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர் .

இப்படத்தின் படப்பிடிப்பு  சென்னையில் முதற்கட்டமாக 45 நாட்கள் நடைபெற உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ரத்னம் படத்தை முடித்து விட்டு சுமார் ஒன்றரை ஆண்டுகளாகப் படப்பிடிப்பு இல்லாமல் இருந்தார் விஷால்.இடையில் அவருடைய துப்பறிவாளன் 2 படத்தைத் தொடங்க முயற்சிகள் எடுத்தார்.அது நடக்கவில்லை. சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்தது. அவருடைய சம்பள விசயத்தால் அதுவும் நடக்கவில்லை என்று சொல்லப்பட்டது.

இப்போது இந்தப்படம் அமைந்தது எப்படி?

இந்தப்படத்தை சூப்ப்ர்குட் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் இதன் பின்னணியில் பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன் உள்ளார் என்று சொல்லப்படுகிறது.

விஷாலுக்குக் கொடுத்த கடனைத் திரும்பப் பெறவே இப்படம் தொடங்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

அதேநேரம், தமிழ்த் திரையுலகின் முன்னுதாரணப்படமாகவும் இது அமைந்திருக்கிறது என்கிறார்கள்.

எப்படி?

பொதுவாக ஒரு படம் தொடங்குவதென்றால் அப்படத்தின் பெரும்பகுதி செலவாக கதாநாயகனின் சம்பளம் தான் இருக்கும்.ஆனால் இந்தப்படத்தைப் பொறுத்தவரை விஷால் ஒரு ரூபாய்கூட சம்பளம் பெறாமல் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம்.

இந்தப்படத்தை உருவாக்க சுமார் இருபது கோடி செலவாகும் என்றால், அதுமட்டும்தான் முதலீடு செய்யப்படும்.

படம் நிறைவடைந்த பிறகு வியாபாரம் நடக்கும். விஷால் படங்கள் சுமார் ஐம்பதிலிருந்து அறுபது கோடி வரை வியாபாரம் ஆகும் என்று சொல்லப்படுகிறது.

அறுபது என்று வைத்துக் கொண்டால் தயாரிப்புச் செலவு இருபது போக மீதி நாற்பது கோடியை ஆளுக்குப்பாதியாகப் பிரித்துக் கொள்வது என்று முடிவெடுத்திருக்கிறார்களாம்.

அப்படி நடந்தால் விஷால் சம்பளம் இருபது கோடி என்றாகும்.அவர் பதினெட்டு கோடி கேட்டதால் படம் கிடைக்காமல் இருந்தார்.இப்போது இருபது கோடிக்கான திட்டத்துடன் களமிறங்குகிறார். இப்படம் நன்றாக ஓடினால் இதைவிட இன்னும் அதிகமாகக் கிடைக்கும். இல்லையெனினும் இது நிச்சயம் என்கிறார்கள்.

இந்தப் படத்தை சூப்பர்குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பதாலும் திருப்பூர் சுப்பிரமணியன் பின்னணியில் இருப்பதாலும் விஷால் நம்பிக்கையாக இந்தத் திட்டத்துக்கு ஒப்புக்கொண்டிருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

Related Posts