செய்திக் குறிப்புகள்

பல்லாவரத்தில் இரவுக்காட்சி பார்த்த பெண் பகிர்ந்த சொற்கள் – இயக்குநர் நெகிழ்ச்சி

இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி, ரோஷினி ஹரிப்பிரியன், விஷ்வா, ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக், சுனில் சுகதா சாம்ஸ்,கீதா கைலாசம் மற்றும் பலர் நடித்திருந்த மெட்ராஸ் மேட்னி எனும் திரைப்படம் ஜூன் மாதம் 6 ஆம் தேதியன்று வெளியானது.

இந்தப் படத்தை பார்த்த இரசிகர்களும் ஊடகங்களும் நல்ல படைப்பு என்ற விமர்சனத்தை வழங்கி வருகிறது. இதனால் இந்தப்படம் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. தொடர்ந்து நூற்றுக்கணக்கான திரையரங்குகளில் இரசிகர்களின் பேராதரவுடன் இந்தப் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்தத் தருணத்தில் படத்தை வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும், இரசிகர்களுக்கும் படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் விழா ஒன்றினை சென்னையில் ஒருங்கிணைத்திருந்தனர்.ஜூன் 17 அன்று நடந்த இந்த விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

விழாவில் நடிகர் ‘லொள்ளு சபா’ சாமிநாதன் பேசுகையில்….

புதிய கலைஞர்களின் முயற்சியை ஊடகங்கள் பாராட்டின.இதனால் இந்தப் படத்திற்கு வெற்றி கிடைத்தது.இந்தப் படத்தில் என்னுடைய வழக்கமான பாணியில் நடிக்காமல் இயக்குநர் சொன்னதைக் கேட்டு நடித்தேன்.படப்பிடிப்புத் தளத்திற்கு மதியம் ஒரு மணிக்குச் சென்றேன். இரண்டு மணிக்குக் காட்சிகளைப் படமாக்கத் தொடங்கினர். நான்கு மணிக்கு என்னுடைய பங்களிப்பு நிறைவு என்று சொல்லிவிட்டார்கள். அதன் பிறகு படத்திற்கு பின்னணி பேசுவதற்காகச் சென்றேன். அங்கும் எனக்கு வித்தியாசமான அனுபவம் தான் கிடைத்தது. இப்படத்தின் இயக்குநரை நினைத்தால் பெருமிதமாக இருக்கிறது. ஒவ்வொரு காட்சியையும் ரசனையுடன் சொல்லிக் கொடுத்தார்.
படத்தில் நடித்த அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றி என்றார்.

இசையமைப்பாளர் கே.சி.பாலசாரங்கன் பேசுகையில்….

அனைவருக்கும் நன்றி. இப்படம் தொடர்பாக இணையத்தில் வெளியான அனைத்து விமர்சனங்களையும் நான் கவனித்து வாசித்திருக்கிறேன். அனைவரும் தங்களின் மேலான ஆதரவை வழங்கியிருக்கிறார்கள். படத்தை தங்களுடைய படமாக நினைத்து அனைவரிடமும் பகிர்ந்து கொண்ட ஊடகத்தினருக்கும், இரசிகர்களுக்கும் நன்றி.இந்தப் படத்திற்கு சிறப்பான திரையரங்க அனுபவத்தை ஒலி மூலம் வழங்கிய தொழில்நுட்பக் கலைஞர் ரூபனுக்கும் நன்றி என்றார்.

நடிகர் விஷ்வா பேசுகையில்….

இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்த இரசிகர்களுக்கு நன்றி. வெளியான நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் வித்தியாசமான அனுபவங்களைச் சந்திக்கிறேன். எனக்கு இந்தப் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வழங்கிய இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி.
படத்தில் நடிப்பதற்கு ஒவ்வொரு கலைஞர்களுக்கும் வாய்ப்பு வழங்கிய இயக்குநருக்கு நன்றி.குறிப்பாக என் மீது நம்பிக்கை வைத்து தினேஷ் கதாபாத்திரத்தை வழங்கியதற்காக இயக்குநருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் .

நடிகை ரோஷினி ஹரிப்பிரியன் பேசுகையில்…..

சின்ன பட்ஜெட் படமாக இருந்தாலும் எங்களின் கனவு பெரிதாக இருந்தது.கனவும்,ஆசையையும் வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும்,இரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.தொடர்ந்து ஆதரவு தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
தொடங்கும்போது பேப்பரில் இருந்த இந்தக் கதையை திரைக்குக் கொண்டு வந்து, அந்த உணர்வை அனைவரும் உணர்ந்து இரசித்துப் பாராட்டும் போது அதைச் சொல்வதற்கு வார்த்தை இல்லை. நாங்கள் அனைவரும் இணைந்து நடித்த ஒரு படத்திற்கு அனைவரும் தங்களின் இதயப் பூர்வமான ஆதரவை தெரிவித்ததை நேரில் பார்க்கும் போது உற்சாகமாக இருந்தது. இரசிகர்கள், இரசிகைகள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்தப் படத்தை வெளியிட்ட ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும், இந்தப் படத்தைப் பார்த்துப் பாராட்டிய திரையுலகப் பிரபலங்களுக்கும் நன்றி என்றார்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த விநியோகிஸ்தர் குகன் பேசுகையில்…

இப்படத்திற்கு ஊடகங்களும்,இரசிகர்களும் கொடுத்த ஆதரவும், வரவேற்பும் மிக அதிகம். இதற்கு எங்கள் நிறுவனத்தின் சார்பில் கோடான கோடி நன்றிகள்.இந்தப் படத்தைப் பார்த்து பாராட்டிய திரையுலக பிரபலங்களுக்கு நன்றி.
‘மெட்ராஸ் மேட்னி’ நடுத்தரக் குடும்பத்து மக்களின் கதை. இதில் என்ன கதையை இவர்கள் சொல்ல வருகிறார்கள்..? இது ஒரு சாதாரணக் கதை. ஆனால் இதை ஒரு திரைப்படமாக உருவாக்குவதற்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும். மேலும் இந்தக் கதை மீது நம்பிக்கை வைத்த இயக்குநர் கார்த்திகேயன் மணிக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும்.
சாதாரண கதையை அசாதாரணமான திரைக்கதை மூலம் இரசிகர்களை வியக்க வைத்திருந்தார். அதனால் தான் இந்தப் படத்தைப் பார்த்த மக்கள் அனைவரும் பாராட்டினார்கள். படத்துடன் உணர்வுபூர்வமாக தொடர்பு கொண்டார்கள். படம் வெளியான பிறகு படத்தைப் பார்த்த இரசிகர்களிடத்தில் அதன் தாக்கம் அதிகம் இருந்தது.
படத்தின் கதையைக் கேட்டு நடித்த நடிகர்கள் அனைவரும் இதனை எப்படிப் புரிந்து கொண்டிருப்பார்கள். அதை திரையில் வழங்கிய விதம் இன்னும் எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது.
இயக்குநர் – இசையமைப்பாளர் – ஒளிப்பதிவாளர் – படத்தொகுப்பாளர் – என அனைவரும் புதுமுக கலைஞர்கள். சினிமா மீது அர்ப்பணிப்புடன் கூடிய ஆர்வத்துடன் இருப்பவர்கள். இதன் காரணமாகத்தான் இவர்களால் இப்படி ஒரு படைப்பை உருவாக்க முடிந்தது என நான் நினைக்கிறேன்.
இந்தத் தருணத்தில் எங்கள் நிறுவனத்துடன் இணைந்து பயணித்த திரையரங்கு உரிமையாளர்களுக்கும், பணியாளர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்கள் நிறுவனம் கலந்து கொள்ளும் மூன்றாவது நன்றி அறிவிப்பு விழா இது. இதில் என்ன ஆச்சரியம் என்றால் மூன்று படங்களில் பணியாற்றியவர்கள் அனைவரும் புதுமுகப் படைப்பாளிகள் என்பது தான் என்றார்.

இயக்குநர் கார்த்திகேயன் மணி பேசுகையில்….

மெட்ராஸ் மேட்னி எனும் திரைப்படத்தை ஏன் முதலில் இயக்கினேன் என்றால்.. இது வரை சொல்லப்படாத ஒரு கதை. உண்மையான ஹீரோ யார் என்பதை சொல்லும் கதை இது.
தான் முன்னேற வாய்ப்பே இல்லை என்று தெரிந்தும் ஓயாமல் ஓடும் நம்முடைய அப்பா அம்மாக்கள் தான் என்னைப் பொறுத்தவரை ரியல் ஹீரோ.
அவர்களுடைய கதையை ஒரு திரையரங்க அனுபவத்துடன் கூடிய கதையாகச் சொல்ல வேண்டும் என நினைத்தேன். இந்த நோக்கத்தில் உருவானது தான் இந்தப்படம்.
புது தயாரிப்பு நிறுவனம் – புது இயக்குநர் – புது தொழில்நுட்பக் கலைஞர்கள் – சின்ன பட்ஜெட் படம் – நாங்கள் எளிதாகக் காணாமல் போயிருக்கலாம். அதற்கான வாய்ப்பும் அதிகம் இருந்தது. ஆனால் இந்தக் கதை ஒரு அர்த்தமுள்ள கதையாக இருந்ததால்.. ஊடகங்கள் இந்தப் படத்தை வெகுவாக ஆதரித்தன.‌ இதுதான் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. அத்துடன் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எனும் பிரபலமான நிறுவனம் எங்களுடன் இணைந்ததால் இந்த வெற்றி சாத்தியமானது. இதற்காக அந்த நிறுவனத்திற்கும் தயாரிப்பாளர்
எஸ்.ஆர்.பிரபு மற்றும் குகனுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதைத்தொடர்ந்து இந்தப் படத்திற்கு நடிகர்கள் தங்களின் அர்ப்பணிப்புள்ள உழைப்பை வழங்கி கதாபாத்திரத்திற்கு உயிர்ப்பூட்டியதால் இந்த வெற்றி கிடைத்தது. இதற்காக இப்படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவர்களுடன் பணியாற்ற வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது.
இந்தப் படத்திற்கு இரசிகர்களின் எதிர்வினையை நான் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்.படம் வெளியான இரண்டாவது நாள் பல்லாவரத்தில் இரவுக் காட்சி பார்த்துவிட்டுத் திரும்பும் ஒரு பெண் தன் கண்ணீரை அடக்கிக் கொண்டு’ நான் ஒரு டாக்டர் என் அப்பா ஒரு ஆட்டோ டிரைவர் ‘என்று என்னிடம் சொன்னபோது உண்மையில் மகிழ்ச்சியாக இருந்தது.
தமிழ் இரசிகர்கள் உணர்வுப்பூர்வமானவர்கள் மட்டுமல்ல. அறிவுப் பூர்வமானவர்களும் கூட. இந்த இரண்டும் இணைந்து கொடுத்தால் அவர்கள் கொண்டாடத் தவறுவதில்லை. மெட்ராஸ் மேட்னி அதற்கு ஒரு சிறந்த உதாரணம். படத்தைத் திரையரங்கிற்குச் சென்று பார்க்கும் இரசிகர்களுக்கு நன்றி.
இந்தப் படம் வெளியான பிறகு, ‘காளி வெங்கட் கொண்டாடப்பட வேண்டியவர்’ என்பதை உணர்ந்தேன். அவர் ஒரு இலாபத்தை வழங்கும் நட்சத்திர நடிகர் என்பதையும் ஒரு தயாரிப்பாளராக இங்கு கூறுவதில் பெருமிதம் கொள்கிறேன் என்றார்.

நடிகர் காளி வெங்கட் பேசுகையில்….

இந்தப் படத்திற்கு இதுவரை வழங்கிய ஆதரவிற்கும், இதற்கும் மேலும் தொடர்ந்து வழங்கப் போகும் ஆதரவிற்கும் நன்றி.
இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநருக்கு நன்றி. இப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியூசரான அபிஷேக் ராஜா மூலம் இயக்குநர் அறிமுகமாகி கதையைச் சொன்னார். அதன் பிறகு அந்தக் கதாபாத்திரத்தைச் சொன்னார். அது என்னுடைய தந்தையை
நினைவு படுத்தியது. அவருக்கு சமர்ப்பிக்க இதைவிட சிறந்த வாய்ப்பு கிடைக்காது என்று இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.
இந்தப் படம் வெளியான பிறகு இரசிகர்களின் வரவேற்பைத் தெரிந்து கொள்வதற்காக திரையரங்கத்திற்குச் சென்ற போது, சிலர் என்னை கட்டிப்பிடித்து அழுதனர். என் சட்டை இரசிகர்களின் கண்ணீரால் நனைந்தது. இந்த அனுபவம் புதிதாக இருந்தது மறக்க முடியாததாகவும் ஆகிவிட்டது.
நடிக்கும்போது அந்தக் கதாபாத்திரம் இரசிகர்களிடத்தில் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைக்கவில்லை.
கலையில் மட்டும் தான் அழுவதைக் கூட இரசிக்க முடியும். இது சினிமாவில் உள்ள நடிகர்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வரம்.
நான் இதற்கு முன்பு அதிகமாகப் பார்த்த படம் கார்கி. தற்போது அதைவிட அதிகமாகப் பார்த்த படம் மெட்ராஸ் மேட்னி. ஏனெனில் இந்தப் படத்தின் ஒலி அமைப்பு மிகச் சிறப்பாக இருந்தது.
இந்தப் படத்தில் ஒரு பாடலைப் பாடிய வடிவேலுக்கு நன்றி. மேலும் இந்த திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் மற்றும் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையைப் படமாக்குவதில் என்ன இருக்கிறது? என்ற கேள்விக்கு இயக்குநர் இந்தப் படத்தைப் பதிலாக அளித்திருக்கிறார். இதனால் நான் இயக்குநரை மனதாரப் பாராட்டுகிறேன். மேலும் இந்தக் கதையை.. அவர் சொன்ன விதத்தை நான் முக்கியமானதாக பார்க்கிறேன்.
ஒரு கவிதையை மொழிபெயர்த்து அதனை திரைப்படமாக உருவாக்குவது போல் இருந்தது. இயக்குநர் கார்த்திகேயன் மணி தொடர்ந்து இது போன்ற படங்களையும் இயக்க வேண்டும். மேலும் இந்தப் படம் ஏராளமானவர்களுக்கு புதுநம்பிக்கையை அளித்திருக்கிறது. இதற்காகவும் இயக்குநர் கார்த்திகேயன் மணிக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்

இவ்வாறு அவர் பேசினார்.

Related Posts