சினிமா செய்திகள்

ஜனநாயகன் தமிழ்நாடு வியாபாரம் நிறைவு – விலை எவ்வளவு தெரியுமா?

நடிகர் விஜய் இப்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் ஜனநாயகன். எச்.வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தின் பூஜை செப்டம்பர் 4,2024 அன்று சென்னையில் நடைபெற்றது.இப்படத்தில் விஜய், பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, கவுதம் மேனன், நரேன், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

அனிருத் இசையமைப்பாளராகவும், சத்யா ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்து வருகிறார்கள். பெங்களூருவைச் சேர்ந்த கே.வி.என் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்து வருகிறது.

இப்படம் தொடங்கும்போதே இப்படத்தின் வெளியீடு இவ்வாண்டு அக்டோபர் 1 ஆம் தேதி ஆயுதபூசையையொட்டி இப்படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டது.

ஆனால், இணைய ஒளிபரப்பு உரிமை வியாபாரத்தில் ஏற்பட்ட இடையூறு காரணமாக இந்தப்படத்தின் வெளியீடு சில மாதங்கள் தள்ளிப்போனது.

2026 ஆம் ஆண்டு தைப்பொங்கலையொட்டி சனவரி மாதம் 9 ஆம் தேதி இந்தப்படம் வெளியாகுமென அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.இதுகுறித்த அறிவிப்பை மார்ச் 24 அன்று தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது.

இப்படத்தின் திரையரங்க வெளியீட்டுக்குப் பின்னரான இணைய ஒளிபரப்பு விற்ப்னை காரணமாக அக்டோபரிலிருந்து அடுத்த ஆண்டு சனவரிக்கு இப்படம் தள்ளிப்போனது.

இணைய ஒளிபரப்பு வியாபாரம் வெற்றிகரமாக நடந்து முடிந்த கையோடு இப்போது தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமைக்கான வியாபாரமும் முடிந்துவிட்டது என்று சொல்லப்படுகிறது.

தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் இராகுல் கைப்பற்றியிருக்கிறாராம்.

விஜய்யின் முந்தைய படமான தி கோட் அண்மையில் வெளியான அஜீத்தின் குட்பேட்அக்லி ஆகிய படங்களை தமிழ்நாடு திரையரங்குகளில் வெளியிட்டவர் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் சரி இதன் விலை என்ன?

இந்தப்படத்தைத் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமைக்கு சுமார் நூறு கோடி விலை சொன்னதாம் பட நிறுவனம்.அதன்பின் நடந்த பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின் சுமார் தொண்ணூறு கோடி ரூபாய்க்கு இந்த வியாபாரம் முடிந்திருக்கிறதாம்.

இதுதொடர்பான பேச்சு வார்த்தைகள் நிறைவடைந்துவிட்டன என்றும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று சொல்கிறார்கள்.

இதன் மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களான விஜய் அஜீத் ஆகிய இருவரின் படங்களையும் அடுத்தடுத்து வெளியிடும் விநியோகஸ்தர் என்கிற பெருமையை இராகுல் பெறுகிறார் என்று சொல்லப் படுகிறது.

Related Posts