விமர்சனம்

ராஜாகிளி – திரைப்பட விமர்சனம்

பெரும் செல்வந்தர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைத் திறந்து பார்த்தால் பல அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகள் இருக்கும்.அப்படி ஒரு செல்வந்தரை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் ராஜாகிளி.

முருகப்பன் என்கிற தொழிலதிபருக்கு மனைவி துணைவி தவிர இன்னோரு இளம் காதலியும் இருக்கிறார்கள்.அதனாலேயே அவர் வாழ்க்கையில் பல சிக்கல்கள்.அவை என்னென்ன? அவர்றின் விளைவுகள் என்னென்ன? என்பதை விலாவாரியாகச் சொல்லியிருக்கிறது இந்தப்படம்.

பெரும் செல்வந்தர், மனநலம் பாதிக்கப்பட்ட பிச்சைக்காரர் ஆகிய இருவித தோற்றங்களில் நடித்திருக்கிறார் தம்பிராமையா.செல்வந்தர் வேடத்தில் அவருடைய ஆட்டம் பாட்டம் எல்லாம் உற்சாகத் துள்ளலாக அமைந்திருக்கிறது.தற்காலக் கதாநாயகர்களே பொறாமைப்படும் வண்ணம் தோழிகளோடு கும்மாளம் போடுகிறார்.மனநலம் பாதிக்கப்பட்டவராக வரும்போது தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி கலங்க வைக்கிறார்.

தம்பிராமையாவின் முதல் மனைவியாக தீபா,இரண்டாம் மனைவியாக சுபா இளம்காதலியாக சுவேதா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.இவர்களில் தீபா கதாபாத்திரம் உளவியல் ரீதியாக அணுகப்பட்டிருக்கிறது.அவரும் பொருத்தமாக நடித்து வரவேற்புப் பெறுவதோடு பல சிந்தனைகளைத் தூண்டுகிறார்.

சுபா மற்றும் சுவேதா ஆகியோர் வரும் காட்சிகளில் தம்பிராமையாவைப் பார்த்து பலரும் பொறாமைப்படுவார்கள்.

சின்னவேடமெனினும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனியின் செயல்பாடுகள் நெகிழ வைக்கும் வண்ணம் அமைந்திருக்கிறது.

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் அருள்தாஸ், பழ கருப்பையா, டேனியல் அனி போப், பிரவீன் குமார்.ஜி, ரேஷ்மா, வெற்றிக்குமரன், விஜே ஆண்ட்ருஸ், மாலிக், கிரிஷ், கிங் காங் ஆகியோருடைய கதாபாத்திரங்கள் அளவாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

தம்பிராமையாவே இசையமைத்திருக்கிறார்.பாடல்கள் கேட்கலாம்.சாய் தினேஷ் பின்னணி இசை தேவைக்கேற்ப இருக்கிறது.

கேதார்நாத் – கோபிநாத் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.பகட்டான வாழ்வு பட்டுப்போன வாழ்வு ஆகிய இரண்டையும் காட்சிகளிலும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

தம்பிராமையாவின் மகன் உமாபதி ராமையா தான் இயக்கியிருக்கிறார்.குடும்ப வாழ்வில் பெண்கள் பங்கு எவ்வளவு முக்கியம்? அவர்களுக்குள் நடக்கும் மாற்றங்கள் ஒட்டுமொத்த குடும்பத்தையும் எப்படி மாற்றும்? என்பதைச் சொல்லியிருக்கிறார்கள்.குடும்பத் தலைவரிடம் ஆணாதிக்க மனோபாவம் இருந்தால் அவை எப்படிப்பட்ட விளைவுகளை உண்டாக்கும் என்பதையும் பேசியிருக்கிறார்கள்.

குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம்.

– இளையவன்

Related Posts