மிஸ் யூ – திரைப்பட விமர்சனம்
ஒரு விபத்தினால் இரண்டாண்டுகள் நினைவை இழக்கிறார் நாயகன் சித்தார்த்.அந்நிலையில் அவர் நாயகி ஆஷிகா ரங்கநாத்தைப் பார்க்கிறார்.பார்த்ததும் காதல் கொள்கிறார்.உடனே ஆஷிகாவின் புகைப்படத்தை அம்மாவிடம் காட்டி திருமணம் செய்து வைக்கச் சொல்கிறார்.அம்மாவுக்குப் பேரரதிர்ச்சி.அது ஏன்?எதற்காக? என்பதை விவரிக்கும் படம் தான் மிஸ் யூ.
காதல் கதைக்கு மிகப் பொருத்தமாக இருக்கிறார் சித்தார்த்.காதல் காட்சிகளில் இளமை ததும்புகிறது.காதலில் மட்டுமின்றி மோதலிலும் முந்தி நிற்கிறார்.உண்மைக்காக நேர்மையாகப் போராட வேண்டும் என்கிற கதாபாத்திரத்தின் குணாதிசயம் அவருடைய நிஜ குணத்திற்கு பெரிதும் ஒத்துப்போவதால் படத்துக்கும் பலம் கிடைத்திருக்கிறது.
நாயகி ஆஷிகா ரங்கநாத் அழகான நல்வரவு.காதல் படம் என்பதைப் பறைசாற்ற அவருடைய திரை இருப்பு பெரிதும் பயன்பட்டிருக்கிறது.கண்களில் காதல் கனிந்து ததும்பி நிற்கிறது.அவருடைய சின்னச் சின்ன முகபாவங்கள் இரசிக்கும்படி அமைந்திருக்கின்றன.தமிழ்த் திரையுலகில் அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.
கதாநாயகன் உடன் மூன்று நண்பர்கள் இருக்கும் பழைய வழக்கப்படி இந்தப்படத்திலும் பாலசரவணன்,மாறன்,கருணாகரன் ஆகியோர் இருக்கிறார்கள்.இரசிகர்களைச் சிரிக்க வைக்கும் பொறுப்பு அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.அங்கங்கே சிரிக்க வைத்திருக்கிறார்கள்.
நண்பர்கள் எல்லாம் மதுக்கூடத்தில்தான் அதிகம் சந்திக்க வேண்டுமா? அதைத் தவிர்க்கும் வாய்ப்புகள் பல இருந்தும் பலரும் அதையே செய்கிறார்கள்.இந்தப்படத்திலும் அப்படியே இருக்கிறது.
பொன்வண்ணன், ஜெயப்பிரகாஷ், ரமா, அனுபமா குமார், சரத் லோகிதஸ்வா,சஷ்திகா உள்ளிட்டோர் பாத்திரப்படைப்பும் நடிப்பும் பொருத்தமாக அமைந்திருக்கின்றன.
ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.பாடல்கள் இதமாக அமைந்திருக்கின்றன.பின்னணி இசை காட்சிகளுக்கு வலுச் சேர்த்திருக்கிறது.
கே.ஜி.வெங்கடேஷின் ஒளிப்பதிவில் காட்சிகள் கண்களுக்கு சுகமாக இருக்கின்றன.திரைக்கதை உணர்வுகளுக்கேற்ற ஒளியமைப்பு செய்திருக்கிறார்.
தினேஷ் பொன்ராஜின் படத்தொகுப்பு படம் தொய்வின்றி நகர உதவுகிறது.
ஓர் அழகான காதல் கதையை இரசிக்கும்படி சொன்னதோடு,அதற்குள் ஓர் ஆழமான சமுதாய அக்கறைப் பார்வையையும் முன்வைத்திருக்கிறார் இயக்குநர் என்.ராஜசேகர்.
நேர்க்கோட்டில் சென்றிருந்தால் சாதாரணமாகத் தெரிந்துவிடும் ஆபத்து இருப்பதால் காட்சிகளை முன்பின்னாக மாற்றிப் போட்டு மிகச் சரியாக நகர்த்திச் சென்றிருப்பது திரைக்கதையோட்டத்துக்கு உதவியிருக்கிறது.
நல்ல விசயங்களை வியாபார அம்சங்களோடு கலந்து சொல்லும் கலை அவருக்குக் கை வந்திருக்கிறது.
– இளையவன்











