விமர்சனம்

ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ் – விமர்சனம்

நான்கு வெவ்வேறு கதைகள்.அவை ஒரு புள்ளியில் இணையும் வகை திரைக்கதை கொண்ட படம் ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்.

சாதி, மதம், பொருளாதாரம், சமுதாயம் ஆகிய எல்லா நிலைகளிலும் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளையும் ஒடுக்குமுறைகளையும் வெளிப்படுத்தி அவற்றின் கொடுமைகளை பரப்புரை தொனியின்றி உரைத்திருக்கிறது இந்தப்படம்.

நான்கில் ஒரு கதையில், தானி ஓட்டுநராக நடித்திருக்கிறார் பரத்.மனைவியின் மருத்துவச் செலவுக்காகப் பெரும் பணம் தேவைப்படுகிறது.தன் மனைவியின் உயிரைக்காக்க இன்னொரு உயிரை எடுக்க வேண்டிய நிலை.இப்படி ஓர் உணர்ச்சிக் கொந்தளிப்பான வேடத்தைச் சரியாக உள்வாங்கி நடித்திருக்கிறார்.

துப்புறவுத் தொழிலாளி வேடத்தில் நடித்திருக்கிறார் விருமாண்டி அபிராமி.மகனை மருத்துவம் படிக்க வைக்கப் போராடுகிறார்.அதனால் சக்திக்கு மீறி கடன் வாங்குகிறார்.இந்நிலையில் மகன் மாற்றுப்பாலினமாக மாறுகிறார்.பெரும் அதிர்ச்சி என்றாலும் அதையும் உளமார ஏற்றுக்கொள்கிறார்.ஆனால் மகனின் பாலின மாற்றம் கடன் கொடுத்தவனை அத்துமீற வைக்கிறது.அதனால் கொந்தளிக்கிறார்.இந்த வேடத்தில் மிக நன்றாக நடித்து அவருடைய உணர்வுகளை நமக்கும் கடத்திவிடுகிறார்.

தனக்கென தனிக்கனவுகளை வைத்திருக்கும் அஞ்சலிநாயர்,வீட்டாரின் விருப்பத்துக்காக திருமணம் செய்துகொள்கிறார்.திருமணத்துக்குப் பின் கனவை நனவாக்க நினைத்தால் கர்ப்பம் தடையாகிறது.அந்த கர்ப்பத்திலும் ஒரு மர்மம்.அதனால் பதறுகிறார்.அஞ்சலி நாயரின் இந்தத் துய்ரங்கள் நம்மையும் பற்றிக் கொள்ளும் வண்ணம் நடித்திருக்கிறார்.

இன்னொரு நாயகி பவித்ரா லட்சுமியின் சாதி கடந்த காதலுக்கும் சாதிவெறி கொண்ட அப்பா தடையாக இருக்கிறார்.இந்த நேர்த்தில் இளம்பெண்களின் மனநிலை உடல்மொழி எப்படி இருக்கும் என்பதை இவரைப்பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

சாதிவெறி கொண்ட அப்பாவாக நடித்திருக்கும் தலைவாசல் விஜய்,எதிர்மறை வேடமென்றாலும் அதைத் தன் நடிப்பால் இரசிக்க வைக்கிறார்.

அபிராமி நண்பராக வரும் ராஜாஜி,பவித்ராவின் காதலராக வரும் ஷான், கூலிப்படை ஆளாக வரும் கல்கி, வட்டிக்கார வில்லனாக வரும் பி.ஜி.எஸ்., அஞ்சலியின் மாமனாராக வரும் அரோல் டி சங்கர்,தோழராக நடித்திருக்கும் கனிகா ஆகியோரும் நன்று.

ஒளிப்பதிவளர்கள் கே.எஸ்.காளிதாஸ் மற்றும் கண்ணன்.ஆர் ஆகியோர் நான்கு கதைகளையும் வேறுபடுத்திக் காட்ட முனைந்திருக்கின்றனர்.

ஜோஸ் பிராங்க்ளின் இசையில்,போ.போ.சேகுவாரா,தேசமில்லா ராஜா நான் உள்ளிட்ட பாடல்கள் இரசிக்கலாம்.பின்னணி இசையில் தாழ்வில்லை.

பாடல்கள் மற்றும் வசனங்கள் எழுதியிருக்கும் ஜெகன்கவிராஜின் எழுத்துகளில் நடுநிலை முன்னிலை பெறுகிறது.

இதுபோன்ற திரைக்கதை கொண்ட படங்களுக்குப் படத்தொகுப்பாளரின் பங்கு முக்கியம்.அதை உணர்ந்து உழைத்து படத்தை விறுவிறுப்பாக்கியிருக்கிறார் படத்தொகுப்பாளர் சான் லோகேஷ்.

நான்கு கதைகளையும் இணைக்கும் புள்ளியாக ஒரு துப்பாக்கியை வைத்திருக்கிறார் இயக்குநர்.அது வெடிப்பது போல் படத்தின் கருத்து அமைந்துள்ளது.இப்போதைய ஒன்றிய அரசை நேரடியாக விமர்சனம் செய்திருக்கிறார் இயக்குநர் பிரசாத் முருகன். சில குறைகள் இருப்பினும் சமத்துவத்தைப் பேசியிருக்கும் இந்தப்படம் ஆல் டைம் தேவை.

– இளமுருகன்

Related Posts