எமக்குத் தொழில் ரொமான்ஸ் – விமர்சனம்
காதல் கதைகள் விதவிதமாக வந்துவிட்டன.இந்தப் படத்தில் சின்னப் பிரச்சினையால் பிரிந்த காதலர்கள் மீண்டும் சேர முயல்கிறார்கள்.ஆனால் அதற்கு பல்வேறு தடைகள்.அவை என்னென்ன? அவற்றின் முடிவென்ன? என்பனவற்றை நகைச்சுவையாகச் சொல்ல முயன்றிருக்கும் படம் எமக்குத் தொழில் ரொமான்ஸ்.
நாயகனாக நடித்திருக்கும் அசோக் செல்வன்,தன் வேடத்தை மிகவும் இரசித்து நடித்திருக்கிறார்.இளமைத் துள்ளலுடன் நகைச்சுவையாகவும் நடித்து வரவேற்புப் பெறுகிறார்.
நாயகி அவந்திகா மிஸ்ரா,கதை திரைக்கதையின் தன்மையை உள்வாங்கி நாயகன் அசோக் செல்வனுக்கு ஈடுகொடுத்து நடித்திருக்கிறார்.அவர்கள் இருவரும் இருக்கும் காட்சிகள் இரசிக்க வைத்திருக்கின்றன.
எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி,அழகம்பெருமாள்,படவா கோபி ஆகியோர் முக்கிய வேடங்களை ஏற்றிருக்கிறார்கள்.அனைவரும் இயல்பாக நடித்திருக்கிறார்கள் என்பதைத் தனியாகச் சொல்லவேண்டியதில்லை.
நிவாஸ் கே பிரசன்னாவின் இசையில் பாடல்கள் நன்று.பின்னணி இசையில் இளையராஜா இசையையும் தேவைக்கேற்பப் பயன்படுத்தி சிரிக்க வைத்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா, படத்தின் தலைப்பைப் பார்த்து வருபவர்களைத் மகிழ்ச்சிப் படுத்துகிற மாதிரி இளமை மின்னும் காட்சிகளைக் கொடுத்திருக்கிறார்.
மையக்கதை பழ்சென்றாலும் படத்தில் இளைஞர்களைக் கவரும் காதல் இருக்கவேண்டும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய காட்சிகள் இருக்கவேண்டும் எல்லோரும் மகிழ்ந்து சிரிக்கும் வகையில் அவற்றைக் கொடுக்க வேண்டும் என்று உழைத்திருக்கிறார் இயக்குநர் பாலாஜி கேசவன்.
– இளையவன்











