தீபாவளி போனஸ் – திரைப்பட விமர்சனம்
அன்றாட வாழ்வின் சலிப்பான பழக்க வழக்கங்களிலிருந்து மாறுபட்டு இருக்கும் நாட்கள் பண்டிகை நாட்கள்.அவை எல்லோருக்கும் மகிழ்ச்சிகரமாக அமைந்துவிடுவதில்லை.பணக்காரர்களுக்குக் கொண்டாட்டமாகவும் ஏழைகளுக்குத் திண்டாட்டமாகவும் மாறிவிடுகின்றன என்பதை நெஞ்சம் நெகிழும் காட்சிகளுடன் சொல்லியிருக்கும் படம்தான் தீபாவளி போனஸ்.
கணவன் மனைவி ஒரு குழந்தை என அளவாக வாழும் தம்பதியர் விக்ராந்த் ரித்விகா ஆகியோருக்கு ஹரீஷ் எனும் சிறுவன் மகனாக நடித்திருக்கிறார்.இந்தக் குடும்பம் ஒரு தீபாவளியை எப்படி எதிர்கொள்கிறது? என்பதுதான் திரைக்கதை.
நடுத்தரக் குடும்பத்தலைவர் வேடத்துக்கு ஏற்ப விக்ராந்த் இருக்கிறார்.அவருடைய கதாபாத்திரம் மிக சாதுவான கதாபாத்திரம் என வடிவமைத்திருக்கிறார்கள்.அதற்கு அவருடைய முகமும் உடல்மொழியும் நன்றாக ஒத்துழைத்திருக்கிறது.தீபாவளி போனசை எதிர்நோக்கிக் காத்திருப்போரின் தவிப்பையும் தன் மகனின் சின்ன ஆசையை நிறைவேற்ற செருப்புக்கடைக்காரரிடம் இறைஞ்சும் இடங்கள் உட்பட எல்லாக் காட்சிகளிலும் இயல்பாக நடித்திருக்கிறார்.
பக்கத்துவீட்டுப் பெண் போல் நடுத்தரக் குடும்ப நல்ல பெண்களின் பத்துப் பொருத்தமும் பக்காவாகப் பொருந்தியிருக்கிறது நாயகி ரித்விகாவுக்கு.அவருடைய உணர்வுகளைக் கண்களாலேயே வெளிப்படுத்தி நெஞ்சம் கனக்க வைக்கிறார்.
சிறுவனாக நடித்திருக்கும் ஹரீஷும் இவர்களுக்கு ஈடுகொடுத்திருப்பது வியப்பு.
ஒளிப்பதிவாளர் கெளதம் சேதுராமன் பணியில்,படத்தின் கதைக்களம் மதுரை என்று யாராவது சொன்னால்தான் தெரியும் என்பது போல் காட்சிகள் அமைந்திருக்கின்றன.வழக்கமான அடையாளங்கள் ஏதுமின்றி புதிதாகக் காட்சிப்படுத்தி கவர்ந்திருக்கிறார்.
மரிய ஜெரால்டு இசையமைத்திருக்கிறார்.அவருடைய இசையில் பாடல்கள் இனிமை.கதை வெளிப்படுத்தும் உணர்வுகளை முன்னணிக்குக் கொண்டுவர உதவியிருக்கிறது பின்னணி இசை.
கலை இயக்குநர் ஆர்ட் அருண்,கதாபாத்திரங்களின் ஏழ்மையை அவர் அமைத்த அரங்குகளிலும் காட்டியிருக்கிறார்.
படத்தொகுப்பாளர் பார்த்திவ் முருகன்,திரைக்கதையோட்டம் தொய்வாகி விடக்கூடாது என்று கருத்தாக உழைத்திருக்கிறார்.
இயக்குநர் ஜெயபால்.ஜெபி, தீபாவளி பெரும்பாலான குடும்பங்களை எப்படி திண்டாட வைக்கிறது என்பதை வலிய காட்சிகளிலும் எளிய சொற்களிலும் அளவாக வெளிப்படுத்தியிருக்கிறார்.போராட்டம் மட்டுமே வாழ்க்கையா என்று யாரும் பயந்துவிடாதபடி நம்பிக்கையூட்டியிருப்பது அவருக்கும் படத்துக்கும் பலம்.
– இளையவன்











