விமர்சனம்

ஐந்தாம் வேதம் – இணையத் தொடர் விமர்சனம்

இந்து மதத்தில் ரிக், சாம, யஜுர் மற்றும் அதர்வ ஆகிய நான்கு வேதங்கள் இருக்கின்றன.இந்நிலையில் இன்னொரு வேதம் அதாவது ஐந்தாவதாக ஒரு வேதம் இருக்கிறது அதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகள் எப்படிப் பட்டவை? என்கிற கற்பனையின் அடிப்படையில் உருவாகியிருக்கும் இணையத் தொடர் ஐந்தாம் வேதம்.

ஒரு பழமையான ஆலயத்தில் இரகசிய இடத்தில் அந்த வேதம் இருக்கிறது.அது வெளிவரக் காத்திருக்கிறார் அக்கோயில் பூசாரி. அறிவியல் துறையைச் சேர்ந்த சிலர் அந்த வேதத்தைக் கைப்பற்றத் துடிக்கிறது.அந்த வேதம் வெளியில் வந்ததா? என்ன நடந்தது? என்பனவற்றை விவரிப்பதுதான் இந்தத் தொடர்.

முதன்மை வேடத்தில் நடித்திருக்கிறார் சாய் தன்ஷிகா.ஏற்றுக்கொண்ட வேடத்தை முழுமையாக உள்வாங்கி நடித்திருப்பது தெரிகிறது. சந்தோஷ் பிரதாப்பின் வேடமும் நடிப்பும் நன்று.கிரிஷாகுருப் பெரிதும் கவனம் ஈர்க்கும் நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.

பொன்வண்ணன்,விவேக் ராஜகோபால், தேவதர்ஷினி, ராம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன், மேத்தீவ் வர்கீஸ் உட்பட மூத்த மற்றும் புதிய நடிகர்கள் பலர் நடித்துள்ளனர்.அனைவரும் தங்கள் இருப்பைச் சரியாகப் பதிவு செய்துள்ளனர்.

இத்தொடருக்கு அடிப்படை பய உணர்ச்சி என்பதை உணர்ந்து வேலை செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சீனிவாசன் தேவராஜன்.பகலில் படம்பிடிக்கும் காட்சிகளிலும் பயத்தைக் காட்டியிருக்கிறார்.

இசையமைப்பாளர் ரேவா,தன் பின்னணி இசை மூலம் தொடர் விறுவிறுப்புடனும் திகிலுடனும் நகர துணைபுரிந்திருக்கிறார்.இதயத்துடிப்பைப் பன்ம்டங்கு அதிகரிக்க வைத்துவிடுகிறார்.

புராதன கோயில், பாதாள அறை,சுரங்கப்பாதை ஆகியனவற்றை தத்ரூபமாக அரங்கமைத்து கதைக்கும் திரைக்கும் வலுச்சேர்த்திருக்கிறார் கலை இயக்குநர் ஏ.அமரன்.

இது வீட்டில் இருந்தபடியே பார்க்கப்படும் படைப்பு.அதனால்,எந்த இடத்திலும் பார்வையாளர்களுக்கு தொய்வோ,சலிப்போ வந்துவிடக்கூடாது என்று கவனமாகப் பணியாற்றியிருக்கிறார் படத்தொகுப்பாளர் ரஜீஷ்.எம்.ஆர்.

25 ஆண்டுகளாகவும் பேசப்பட்டிருக்கும் மர்மதேசம் தொடரின் சொந்தக்காரரான இயக்குநர் நாகா,இத்தொடரை எழுதி இயக்கியிருக்கிறார்.

புராணம் மற்றும் தற்கால நவீன தொழில்நுட்பமான ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு ஆகியனவற்றைக் கோர்த்து திரைக்கதை எழுதியிருக்கிறார்.பார்ப்போருக்கு எந்த இடத்திலும் குழப்பம் வந்துவிடாதபடி தெளிவாகக் காட்சிகளை வடிவமைத்து கொண்டு செல்கிறார்.

தொடர் தொடங்கும்போதே அதனுடன் ஒன்ற வைத்துவிடுகிறது அவருடைய திரைமொழி.அடுத்தடுத்த பாகங்களில் அவர் சொல்லிச் செல்லும் விசயங்கள்,அறிவியல் ஆன்மீகம் ஆகியனவற்றைப்பற்றி நிறைய அறிந்துகொள்ள வகை செய்கிறது.இறுதியில் எண்ணிப் பார்த்தால் இரண்டுமே ஆபத்தானவை என்று உணர வைக்கிறார்.

– இளையவன்

பின்குறிப்பு – இத்தொடர் ஜீ 5 தமிழ் தளத்தில் அக்டோபர் 25,2024 முதல் காணக் கிடைக்கிறது.

Related Posts