சினிமா செய்திகள்

சிபிராஜ் படம் செய்த மாயம் – வியாபாரத்தில் அசத்தி ஆச்சரியம்

சிபிராஜ் இப்போது ஜாக்சன்துரை 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.இப்படத்தில், சத்யராஜ், சிபிராஜ் ஆகியோருடன் சம்யுக்தா, மனிஷா ஐயர், சரத் ரவி உட்பட பலர் நடிக்கின்றனர். சித்தார்த் விபின் இசையமைக்கிறார். கல்யாண் வெங்கட்ராமன் ஒளிப்பதிவு செய்கிறார்.

முதல்பாகத்தை இயக்கிய பி.வி.தரணிதரன் இயக்குகிறார்.இப்படத்தை ஸ்ரீ கிரீன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு விட்டுவிட்டு நடந்து வருகிறது.

இதற்கிடையே 10 ஹவர்ஸ் என்றொரு படத்தில் நடித்திருக்கிறார் சிபிராஜ்.அறிமுக இயக்குநர் இளையராஜா இயக்கியிருக்கிறார்.துப்பறிவாளன் உள்ளிட்டு பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கார்த்திக் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்திருக்கிறார்.

மலேசியாவைச் சேர்ந்த வினோத் என்பவர் தயாரித்திருக்கிறார்.இவர் தமிழ்த் திரையுலகில் உதவி இயக்குநராகப் பணியாற்றிவிட்டு அதன்பின் மலேசியா சென்று தொழிலதிபராகிவிட்டார்.ஆனாலும் திரைப்படங்களின் மீதான ஆர்வத்தால் தயாரிப்பாளர் அவதாரத்துடன் திரும்பி வந்திருக்கிறார்.

மர்டர் மிஸ்ட்ரியை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் இப்படத்தில் சிபிராஜ் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் அதற்குப் பிறகான வேலைகள் ஆகியன முடிவடைந்து படம் முழுமையாகத் தயாராகிவிட்டது.

இந்நிலையில் மிக மிக வியப்பூட்டும் நிகழ்வுகள் நடந்திருக்கின்றன.

இப்படம் குறித்து படக்குழு எவ்வித அறிவிப்போ விளம்பரமோ செய்யாத நிலையிலும் இப்படத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு பிரபல விநியோகஸ்தரும் தற்போது தயாரிப்பாளராகவும் மாறியிருக்கும் ஃபைவ் ஸ்டார் செந்தில் இப்படத்தின் மொத்த உரிமையையும் வாங்கிவிட்டாராம்.

மொத்த உரிமையெனில், திரையரங்க வெளியீட்டு உரிமை மட்டுமின்றி அனைத்து வியாபாரங்களையும் அவரே செய்கிற விதமாக அவுட்ரேட் எனும் முறையில் படத்தை வாங்கிவிட்டாராம்.

அவர் சுமார் நான்கரை கோடி கொடுத்து மொத்த உரிமையையும் பெற்றிருப்பது அடுத்த ஆச்சரியமான செய்தி.

இதுவே தமிழ்த் திரையுலகினரை மிரள வைத்திருக்கிறதென்றால் இதற்கு மேலும் இன்னொரு சம்பவமும் நிகழ்ந்திருக்கிறது.இப்படத்தின் தெலுங்கு மொழிமாற்று உரிமையை பெல்லகொண்டா சுரேஷ் பெற்றிருக்கிறார்.அதற்காக அவர் கொடுத்ததும் ஒரு பெரும் தொகை என்று சொல்லி மேலும் மிரள வைக்கிறார்கள்.

படம் முழுமையாகத் தயாரானதும் அடுத்தடுத்து நடந்திருக்கும் இந்த அதிரடி நிகழ்வுகள் இதுவரை திரையுலகில் யாரும் கேள்விப்படாதது. இப்படி நடக்கும் என்று யாராவது சொன்னால் கேலியாகச் சிரித்திருப்பார்கள்.

ஆனால் இப்போது அப்படி ஒரு நிகழ்வு நிஜமாகவே நடந்திருக்கிறது.

இவை அனைத்துக்கும் காரணம் படம் நன்றாக வந்திருக்கிறது என்பது மட்டும்தான்.இதுதான் திரையுலகின் பலம்.இதனால்தான் திரைத்துறையைத் தேடி நாள்தோறும் பலர் வரக்காரணமும் கூட.

இந்தக் கதையை நம்பி இதில் நடிக்க ஒப்புக்கொண்டவர் நடிகர் சிபிராஜ்.அதனால் இந்தப்படம் நடந்தது.அவர் நம்பிக்கை பலித்திருக்கிறது. இப்போது இது நிச்சய வெற்றிப்படம் எனும் பெயரைப் பெற்றிருப்பதால் கூடுதல் உற்சாகமாக இருக்கிறாராம்.

Related Posts