சுதா கொங்கரா படம் மீண்டும் தள்ளிப்போகிறது – சூர்யா புது முடிவு
சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சூர்யா. இந்தப்படத்திற்கு அடுத்து சுதாகொங்கரா இயக்கத்தில் அவர் நடிக்கவிருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது.
2023 அக்டோபர் 26 ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில்…
சூர்யாவின் திரையுலகப் பயணத்தில் அவரது நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய படைப்புகளில் ‘சூரரைப் போற்று’ திரைப்படமும் ஒன்று. இப்படத்தை இயக்கிய இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் மீண்டும் சூர்யா கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் மிகவும் சவாலான பாத்திரங்களில் துல்கர் சல்மான், நஸ்ரியா பகத் , விஜய் வர்மா ஆகியோர் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு ‘இசை அசுரன்’ ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் 100 ஆவது படமிது. இந்தத் திரைப்படத்தை சூர்யாவின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் ஜோதிகா, சூர்யா மற்றும் இராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டியன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
என்று கூறப்பட்டிருந்தது.
அக்டோபரில் அறிவிப்பு வெளியானபோதே இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பரில் தொடங்கும் என்று சொல்லப்பட்டது.ஆனால் தொடங்கவில்லை.
அதன்பின் டிசம்பரில் தொடங்கும் என்றார்கள் அதற்கடுத்து சனவரி இறுதி அல்லது பிப்ரவரி தொடக்கத்தில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றார்கள். ஆகவில்லை.
இப்போது அந்தப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரலில்தான் தொடங்கவிருக்கிறது என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
இதற்கிடையே இப்போது புதிய தகவலொன்று உலவிக்கொண்டிருக்கிறது.
அது என்ன?
இன்று நேற்று நாளை, அயலான் ஆகிய படங்களின் இயக்குநர் ஆர்.இரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால் அதுபற்றி எந்தத் தகவலும் இல்லை.
இப்போது அந்தப்படத்துக்கு உயிர் வந்திருக்கிறதாம்.
டிரீம்வாரியர் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் அந்தப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்கவிருக்கிறது என்று சொல்கிறார்கள்.அதற்குத் தக்க இயக்குநர் ஆர்.இரவிக்குமாரின் குழு பணியாற்றிக் கொண்டிருக்கிறதாம்.
அப்படியானால் சுதாகொங்கரா படம் மேலும் தள்ளிப்போகலாம் என்று சொல்லப்படுகிறது.
டிரீம்வாரியர் நிறுவனத்துக்குக் கொடுத்த வாக்குப்படி அந்நிறுவனத்துக்கு ஒரு படம் நடிக்கவேண்டியிருப்பதால் அவர்கள் வசதிக்கேற்ப இந்தப்படத்தைத் தொடங்க சூர்யா சம்மதம் சொல்லிவிட்டார் என்றும் சுதாகொங்கரா இயக்கும் படம் சொந்த நிறுவனமான 2டி நிறுவனம்தான் தயாரிக்கிறது என்பதால் அதைக் கொஞ்சம் தள்ளிவைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்துவிட்டார் என்றும் சொல்கிறார்கள்.
இதனால் சுதாகொங்கரா படம் மேலும் தள்ளிப்போகிறது என்பதோடு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட வாடிவாசல் நடக்காது என்னும் கருத்துக்கும் வலுச்சேர்ந்துள்ளது.
சூர்யா மனந்திறந்து சொன்னால் இவற்றில் எவ்வளவு உண்மை என்பது தெரியவரும்.










