லால் சலாம் படம் ஓர் அரசியல் கருத்தைப் பேசுகிறது – ஐஸ்வர்யா ரஜினி வெளிப்படை
ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க, விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் ரஜினிகாந்த் மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திரைக்கதை மற்றும் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தயாராகியுள்ள படம் லால் சலாம்.
லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படம் பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாக உள்ளது.
அதை ஒட்டி திரைப்படக் குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று ஒரு தனியார் நட்சத்திரவிடுதியில் நடைபெற்றது.
நிகழ்வில் தம்பி ராமையா பேசும் பொழுது……
தமிழ்நாட்டிலும் இந்து, முஸ்லீம்,கிறிஸ்துவம் என மதங்கள் மூன்றாக இருக்கலாம், ஆனால் மனித
மனங்கள் ஒன்றாக இருக்கின்றன. விஷ்ணு ரங்கசாமியின் கதைக்கு கிரிக்கெட்டை மையப்படுத்தி சிறப்பான திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். குடும்பத்துடன் வந்து இரசிக்கும் இரசிகர்களுக்கான உணர்வுப் பூர்வமான காட்சிகளுடன் படத்தை உருவாக்கி உள்ளார.இப்படத்தில நடிக்க எனக்கு வாய்ப்பளித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துக்கு நன்றி என்றார்.
நடிகர் செந்தில் பேசும் பொழுது…….
அருமையான கதையை இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருவாக்கி உள்ளார், அவர் கதையைக் கூறும் பொழுது மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தது. படத்தில் மிகவும் ஒத்துழைப்பு கொடுத்து நடித்த சக கலைஞர்களுக்கும் நன்றி என்றார்.
விவேக் பிரசன்னா பேசும் பொழுது……
படத்தில் ஏதாவது பிரச்சனை இருக்குமா என்று தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு பிரச்சினை இருக்கக் கூடாது என்பதுதான் படத்தின் கரு.அதைப்பார்த்துவிட்டு பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களாகிய நீங்கள் கொடுக்கும் விமர்சனம் ஆழமாகவும் அழுத்தமாகவும் இருக்கும்.இந்தப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களுக்கும் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
நடிகை நிரோஷா பேசும்பொழுது…..
ரஜினிகாந்த் அவர்களுடன் நடிக்க ஏற்கனவே வாய்ப்பு வந்தது கடைசி நேரத்தில் அது நடைபெறாமல் போனது, அதனால் எனது திரை வாழ்க்கை ஒரு முழுமை பெறாமல் இருந்தது. இந்தத்திரைப்படம் மூலமாக திரு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எனக்கு நல்லதொரு வாய்ப்பைக் கொடுத்துள்ளார்.அதனால் மகிழ்ச்சி.ஓர் இயக்குநராக என்ன தேவையோ அதை மிகவும் தெளிவுடன் நடிகர்களிடம் இருந்து சிறப்பான நடிப்பைப் பெற்றுக் கொள்ளும் திறமை அவரிடம் இருக்கிறது என்று பாராட்டினார்.
நடிகர் தங்கதுரை பேசியதாவது…..
முதல்முறையாக ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் அவர்களுடன் நடிப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. நகைச்சுவை கதாபத்திரமாக மட்டும் இல்லாமல், இந்தப்படத்தில் குணச்சித்திரத்துடன் கூடிய நகைச்சுவை கதாபாத்திரமும் கொடுத்துள்ளார்கள். ஒரு திரைப் பல்கலைக்கழகத்தில் நுழைந்து வந்த அனுபவத்தை இந்தபபடம் கொடுத்தது. அந்த அளவிற்கு அத்தனைக் கலைஞர்களுடன் பணிபுரிந்ததாக மிகவும் மகிழ்ச்சியுடன் கூறினார்.
நடிகர்விக்ராந்த் பேசும் பொழுது…..
எனது சினிமா வாழ்க்கை முடிந்துவிட்டது போதும் என்று இருக்கும் பொழுது இந்த வாய்ப்பு வந்தது, அப்பொழுது தான் எனக்கு இன்னும் திரைப்பயணம் இருக்கிறது, இது கடவுள் கொடுத்த பரிசு என்று மகிழ்ச்சியடைந்தேன்.இந்த வாய்ப்பு வழங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி.’சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் அவர்களுடன் இந்தப்படத்தில் நடிப்பது மிகவும் சந்தோசம்.என்னுடன் நடித்த மூத்த கலைஞர்கள் மற்றும் சக கலைஞர்களுக்கு நன்றி.படப்பிடிப்பின்போது
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பு தொடர்பாக நிறைய ஆலோசனை கொடுத்தார்.அவை நல்ல ஊக்கம் அளித்ததன என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.
நடிகர் விஷ்ணு விஷால் பேசும் பொழுது…..
15 ஆண்டுகளை திரைத்துறையில் நிறைவு செய்த தருணத்தில் இந்தப்படம் எனக்கு ஒரு பரிசாகக் கிடைத்திருக்கிறது. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் அவர்களுடன் பலரும் நடிக்க ஏங்கிக் கொண்டிருக்கும் பொழுது அவர் நடிக்கும் படத்தில் அவருக்குக் கீழ் ஒரு கதையின் நாயகனாக நடிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இக்கால கட்டத்திற்குத் தேவையான கருத்தை கிரிக்கெட் மூலமாக இப்படம் பதிவு செய்துள்ளது. ஒரு இயக்குனராக இந்தக்கருத்தைப் படமாக்குவதும் அப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற மிகப்பெரிய ஆளுமை இருப்பதும் மிகுந்த சவால் அளிக்கும் விஷயமாகும். அதை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள் திறம்படச் செய்து முடித்திருக்கிறார்.உடன் பணிபுரிந்த அனைத்துக் கலைஞர்களுக்கும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் நன்றி என்றார்.
இறுதியாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசும்பொழுது…..
ஒரு ஊரில் நடக்கும் தேர்த் திருவிழா அதையொட்டி நடக்கும் கிரிக்கெட் போட்டி அந்தப்போட்டியில் நடக்கும் பிரச்சனைகளை சார்ந்து இந்தப்படத்தின் திரைக்கதை அமைந்துள்ளது. விளையாட்டு வினையானால் எங்கு போய் முடியும் என்பதை இந்தப்படம் பேசுகிறது.
இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் மற்றும் கதாசிரியர் தன்னிடம் இரண்டு கதை கூறினாரகள். அதில் ஒன்றுதான் லால் சலாம். இந்தப் படம் மக்களைச் சார்ந்த ஒரு சிறிய அரசியல் கருத்தைப் பேசுகிறது. குடிமகனாக இருக்கக்கூடிய அனைவருக்கும் அரசியலுடன் ஒரு பங்கு உள்ளது. அரசியல் இல்லாமல் எந்த நாடும் ஜனநாயகமும் இயங்க முடியாது. அரசியல் என்பது எல்லாத்திலும் உள்ளது அதை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதில்தான் எல்லாமே உள்ளது. படத்தில் பணியாற்றிய மூத்த கலைஞர்கள் மற்றும் நடிகர்களுக்கும் சக தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் நன்றி
இவ்வாறு அவர் பேசினார்.











