அசோக்செல்வன் ஆர்ஜே.பாலாஜியின் பாராட்டுப் பெறும் முன்மாதிரி
சனவரி 25 ஆம் தேதி அசோக்செல்வன்,சாந்தனு,கீர்த்திபாண்டியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள
புளூஸ்டார்,ஆர்.ஜே.பாலாஜி,மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள
சிங்கப்பூர் சலூன் ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன.
இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகும் நேரத்தில் இரண்டு படக்குழுவினரும் இணைந்து ஒன்றாக கிரிக்கெட் விளையாடி தங்களது நட்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இயக்குநர் பா.இரஞ்சித் தலைமையில் புளூஸ்டார் படக்குழுவினரும்,நடிகர் ஆர்ஜே.பாலாஜியின் தலைமையில் சிங்கப்பூர் சலூன் படக்குழுவினரும் இணைந்து நட்புக்காக கிரிக்கெட் விளையாடியுள்ளனர்.
ஒரே நேரத்தில் எதிரெதிர் படங்களாக வெளியாகும் நேரத்தில் இரண்டு படக்குழுவினரும் நட்பாக கிரிக்கெட் விளையாடியது ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது.
இரண்டு படங்களும் வெற்றியடைய படக்குழுவினர் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டனர்.
நிகழ்வில் பா.இரஞ்சித்,ஆர் ஜே பாலாஜி, அசோக்செல்வன், சாந்தனு, பிரித்வி, கீர்த்திபாண்டியன், கிஷன் தாஸ், எடிட்டர் செல்வா மற்றும் இரண்டு படங்களின் குழுவினரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட இரு படக்குழுவினரும் இவ்விளையாட்டின் மூலம் புத்துணர்ச்சி அடைந்ததாகச் சொல்கின்றனர்.
அவரவர் படத்தை மட்டும் விளம்பரப்படுத்த எண்ணுவது வழக்கமாக இருக்கும் நேரத்தில் இரண்டுபடக்குழு இணைந்து இரண்டு படங்களையும் விளம்பரப்படுத்தும் இந்நிகழ்வு முன்மாதிரியாக அமைந்தால் நல்லது என திரையுலகினர் கூறுகிறார்கள்.











