சினிமா செய்திகள்

தமிழ்நாடு காவல் டிஜிபி சங்கர்ஜிவால் மகள் கதாநாயகியாகிறார்

2023 ஆம் ஆண்டின் வெற்றிப்படங்களில் ஒன்று டாடா. கவின் நடித்த அந்தப்படத்தை இயக்கியவர் கணேஷ் கே.பாபு. ஒலிம்பியா பிக்சர்ஸ் சார்பில் அம்பேத்குமார் தயாரித்த அந்தப்படத்தின் வெற்றி அப்பட நாயகன் கவினின் சந்தை மதிப்பைப் பன்மடங்கு உயர்த்திவிட்டது.

அப்படத்தை இயக்கிய கணேஷ்.கே.பாபுவுக்கும் உடனே அடுத்த படம் கிடைத்தது.டாடா படம் வெளியான அன்றே லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் படம் இயக்கவிருக்கிறார் என்று அறிவிப்பு வந்தது. அதன்பின் அவர் இயக்கும் படத்தில் துருவ் விக்ரம் நாயகனாக நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது.

அதன்பின் அதுபற்றி எந்தச் செய்தியும் இல்லை. இடையில் அப்படம் கைவிடப்பட்டுவிட்டதாகவும் தகவல் உலவியது.

ஆனால் அதில் உண்மையில்லையாம்.

அப்படியானால் உண்மை என்ன?

2011 இல் அறிவிக்கப்பட்ட படம் மாரிசெல்வராஜ் – துருவ்விக்ரம் இணையும் படம். அந்தப் படமே இன்னும் தொடங்கவில்லை. பல்வேறு நிலைகளைக் கடந்து அப்படம் பிப்ரவரி இறுதி மார்ச்சில் தொடங்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அந்தப்படத்தைத் தொடர்ந்து கணேஷ்கே.பாபு இயக்கும் படத்துக்கு துருவ் விக்ரம் வருவார். அது இந்த வருட இறுதியாகிவிடும் வாய்ப்பு இருக்கிறது.

எனவே, அதற்கு முன்பாக ஒரு படத்தை கணேஷ் கே.பாபு இயக்கவிருக்கிறார். அந்தப்படத்தில் நாயகனாக ஜீவா நடிக்கிறார். லைகா நிறுவனமே தயாரிக்கிறது.

விரைவில் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாகச் சொல்லப்படும் இந்தப்படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார் தவ்தி ஜிவால். இவர் தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் சங்கர் ஜிவால் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

லைகா நிறுவனம் இவரை திரைப்பட கதாநாயகியாக்குவது என்று முடிவு செய்தது. முதலில் துருவ்விக்ரமுக்கு இணையாக அவரை நடிக்க வைக்கத் திட்டமிட்டார்கள். அந்தப்படம் தாமதமாவதால் அதற்கு முன்பாகத் தொடங்கப்படும் ஜீவா படத்தில் அவரை நாயகியாக்க வேண்டும் லைகா நிறுவனம் பரிந்துரை செய்திருக்கிறது.

அதை இயக்குநர் கணேஷ் கே.பாபுவும் நாயகன் ஜீவாவும் ஏற்றுக் கொண்டனர்.இதனால் அந்தப்படம் மூலம் அவர் கதாநாயகியாக அறிமுகமாகவிருக்கிறார்.

Related Posts