சினிமா செய்திகள்

கார்த்தி படத்திலிருந்து கடைசிநேரத்தில் விலகிய பி.சி.ஸ்ரீராம் – ஏன்?

கார்த்தி நடித்துள்ள ஜப்பான் திரைப்படம் இரண்டுநாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்போது கார்த்தி, நலன்குமாரசாமி இயக்கும் புதியபடத்தில் நடித்திருக்கிறார்.ஸ்டுடியோகிரீன் நிறுவனம் தயாரிக்கும் அப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், அவர் நடிக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு இந்த வாரம் அதாவது நவம்பர் 17 முதல் தொடங்கவிருக்கிறது.இப்படம் கார்த்தியின் 27 ஆவது படம்.

சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தை 96 படத்தை இயக்கிய பிரேம் இயக்குகிறார்.96 படத்தில் திகட்டத் திகட்ட காதலைச் சொன்ன இயக்குநரின் இந்தப்படத்தில் கதாநாயகியே இல்லை என்பது வியப்பான முரண்.

96 படத்துக்கு இசையமைத்த கோவிந்த்வசந்தாவே இந்தப்படத்துக்கும் இசை அமைக்கிறார்.

இப்படத்துக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார் என்று செய்திகள் வந்தன. ஆனால் படப்பிடிப்பு தொடங்கும் நேரத்தில் அவர் இல்லை. 96 படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளரே இந்தப்படத்துக்கும் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறாராம்.

கடைசி நேரத்தில், பி.சி.ஸ்ரீராம் படத்திலிருந்து விலகியதற்கு என்ன காரணம்?

இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி இரவிலேயே நடக்கவிருக்கிறதாம்.முதல்கட்டப் படப்பிடிப்பு சுமார் நாற்பதுநாட்கள் எனத் திட்டமிடப்பட்டிருக்கிறதாம். நாற்பது நாட்களுமே இரவிலேயே படப்பிடிப்பு என்று திட்டமிட்டிருக்கிறார்கள்.

அவ்வளவு நாட்கள் தொடர்ச்சியாக இரவுப்படப்பிடிப்பில் பி.சி.ஸ்ரீராம் பணியாற்றக்கூடாது என்று அவருடைய மருத்துவர்கள் அறிவுரை கூறினராம். அதற்கு அவருடைய உடல்நிலை இடம் கொடுக்காது என்றும் கூறியுள்ளனர். அதனால் படக்குழுவிடம் இதனைச் சொல்லிவிட்டு அவர் விலகிக் கொண்டார் என்று சொல்லப்படுகிறது.

இரவில் நடக்கும் கதையில் பி.சி.ஸ்ரீராம் இருந்தால்தான் சிறப்பாக இருக்கும் என்று படக்குழுவினர் முடிவு செய்து அவரை ஒப்பந்தம் செய்தனர். அவரும் ஆர்வமுடன் ஒப்புக்கொண்டார். ஆனால் கடைசி நேரத்தில் அவருடைய உடல்நலனை முன்னிட்டு அப்படத்திலிருந்து அவர் விலகியிருப்பது அனைவருக்கும் வருத்தம் கொடுக்கக்கூடிய செய்திதான்.

Related Posts