22 ஆண்டுகளாக முன்னணி ஒளிப்பதிவாளராகத் தொடர்வது எப்படி? – ஆர்.டி.ராஜசேகர் பேட்டி
2001 ஆம் ஆண்டு வெளியான மின்னலே படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகுக்கு ஒளிப்பதிவாளராக அறிமுகம் ஆனவர் ஆர்.டி.ராஜசேகர். அப்போதிருந்து இப்போது வரை முன்னணி ஒளிப்பதிவாளராகத் திகழ்கிறார். அண்மையில் அவர் ஒளிப்பதிவு செய்த சந்திரமுகி 2 மற்றும் 800 ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகின.அவ்விரண்டு படங்களிலும் அவருக்கு மிகுந்த நற்பெயர்.
அவரிடம் ஒரு பேட்டி….
1. சந்திரமுகி 2, 800 என உங்கள் ஒளிப்பதிவில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் வெளியாகியுள்ளன. எப்படி உணர்கிறீர்கள்?
இரண்டு படங்களும் முன்பு திட்டமிட்டபடி தொடங்கி நடந்திருந்தால் குறிப்பிட்ட இடைவெளியில் வெளியாகியிருக்கும்.ஆனால் பல காரணங்களால் தாமதம் ஏற்பட்டு இரண்டு படங்களும் அடுத்தடுத்த வாரம் வெளியானது. இரண்டு படங்களிலும் என்னுடைய உழைப்புக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்பது எனக்கு மகிழ்ச்சி.

Thotta dharani – lawrence -p.vasu -R.D.Rajasekar
2. சந்திரமுகி படத்தோடு ஒப்பீடு இருந்திருக்கும். எப்படி எதிர்கொண்டீர்கள்?
சந்திரமுகி என்பது பி.வாசு சாரின் உருவாக்கம். படம் தொடங்கும்போதே,இது முதல்பாகத்தின் தொடர்ச்சியாகவே இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.கதாபாத்திரங்கள் மட்டுமின்றி முதல்பாகத்தில் இடம்பெற்ற கதவு மற்றும் மாடிப்படிக்கட்டுகள் உள்ளிட்ட சில விசயங்கள் எவ்வித மாற்றமும் இல்லாமல் அப்படியே இருக்கவேண்டும் என்று சொல்லிவிட்டார்.அதை அப்படியே கடைபிடித்தோம். லாரன்ஸ் சார் கங்கனா ஆகியோர் அந்தந்த வேடங்களுக்கு மிகப்பொருத்தமாக இருந்தனர். எனவே படப்பிடிப்பில் உற்சாகமாகப் பணியாற்றினோம்.
3. 800 படப்பிடிப்பு அனுபவங்கள்?
இந்தப்படம் முதலில் விஜய்சேதுபதி நடிப்பதாக இருந்தது.எதிர்ப்புகள் காரணமாக அவர் படத்திலிருந்து விலகிக்கொண்டதால் இந்தியிலிருந்து மதுர் மிட்டலைத் தேர்வு செய்தோம்.விஜய்சேதுபதி நடித்திருந்தால் படத்தின் பட்ஜெட் பெரிதாக இருந்திருக்கும். மதுர்மிட்டல் என்பதால் பட்ஜெட் கட்டுப்பாடுகள் இருந்தன. ஆனாலும் அதனால் படத்தின் தரத்தில் எவ்விதக் குறையும் வந்துவிடக்கூடாது என்பதற்காகக் கூடுதல் உழைப்பைச் செலுத்தினேன்.தொழில்நுட்ப உதவிகளோடு அதைச் சாத்தியமாக்க முடிந்தது.

Muthaiyah muralidharan – R.D.Rajasekar
4. 800 படம் உருவாக்கத்தில் ஏதேனும் இடையூறு இருந்ததா?
இலங்கையில் சுமார் அறுபது நாட்கள் அதன்பின் இலண்டன் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தினோம். இலங்கையில் படப்பிடிப்பு தொடங்கியபோது அங்கு ஆட்சிமாற்றம் நடக்கக் காரணமாக இருந்த போராட்டம் தொடங்கியிருந்தது. அதனால், நாங்கள் தங்கியிருந்த விடுதியில் இருந்து வெளியே வர இயலாத நிலை ஏற்பட்டது. பின்வழியாக வெளியேறி படப்பிடிப்புத்தளத்துக்குச் சென்றோம்.அதைவிட பெட்ரோல் டீசலுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு எங்களுக்குக் கடும் சிரமத்தைக் கொடுத்தது. முத்தையாமுரளிதரன் சார், அவருக்குத் தெரிந்த தொழிற்நிறுவனங்கள் மூலம் பெட்ரோல் டீசல் கிடைக்க உதவினார்.அதனால் நாங்கள் திட்டமிட்டபடி சரியாகப் படப்பிடிப்பை நடத்திவிட்டுத் திரும்பினோம்.
5. 22 ஆண்டுகளாக முன்னணி ஒளிப்பதிவாளராகத் தொடர்வதன் இரகசியம் என்ன?
என் உழைப்பின்மேல் நான் கொண்டிருக்கும் ஈடுபாடு முதன்மைக்காரணம், அடுத்து,நான் இராஜீவ்மேனன் சாரிடம் எட்டாண்டுகளுக்கும் மேல் பணியாற்றினேன். அவரிடம் கற்றுக்கொண்டவை ஏராளம். அவற்றை நான் கடைபிடிக்கிறேன்.அதனால் இந்தப்படம் இவர் இருந்தால்தான் நன்றாக இருக்கும் என்று பலரும் என்னைத் தேடி வருகிறார்கள்.
6.நவீன தொழில்நுட்ப வசதிகளால் யார் வேண்டுமானாலும் ஒளிப்பதிவு செய்துவிட முடியும் என்று சொல்லப்படுவது குறித்து..?
தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்டன என்பதால் எடுக்கப்பட்ட ஏராளமான படங்கள் வெளியே வரவேயில்லை. அப்படி வந்தவர்களும் ஓரிரு படங்களுக்கு மேல் தொடரமுடியவில்லை. எவ்வளவு தொழில்நுட்பம் வளர்ந்தாலும் அதைச் சரியான இடத்தில் முறையாகப் பயன்படுத்தும் அறிவு வேண்டும். அதோடு கருவிகள் மட்டும் திரைக்கலையைத் தீர்மானித்துவிடாது க்ரியேடிவிட்டி முக்கியம். அது இல்லாமல் ஒன்றும் இல்லை.
7.கதையைத் தாண்டி உங்களுடைய அடையாளங்களைக் காட்டுவது எப்படி? ஏன்?
பெரிதும் நான் கதையைத் தாண்டி என்னைக் காட்டிக் கொள்ளவேண்டும் என்று நினைத்ததில்லை. ஆனால் கதாநாயகர்கள் அறிமுகம் போன்ற காட்சிகளில் படம் பெரியவரவேற்புப் பெறவேண்டும் என்பதற்காக நான் காட்டும் சிரத்தை என்னைத் தனித்துக்காட்டலாம்.
8. முன்னணி நாயகர்கள் படத்தில் மட்டுமே பணியாற்றுவீர்களா?
இதுவரை எந்தப்பட வாய்ப்பையும் நான் தேடிப்போனதில்லை.கதையும் களமும் தான் என்னைத் தேடுகின்றன என நினைக்கிறேன்.
9. நீங்கள் இயக்குநராவது எப்போது?
அதற்கான ஆயத்தவேலைகளில் ஈடுபட்டிருக்கிறேன். விரைவில் அது நடக்கும்.
10.இப்போது பணியாற்றும் படங்கள்..?
நயன்தாரா முதன்மை வேடத்தில் நடிக்கும் மண்ணாங்கட்டி படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறேன். இன்னும் சில முக்கியப்படங்களில் கேட்கிறார்கள். இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த பின் அவற்றை ஏற்பேன்.
– ரவி











