சினிமா செய்திகள்

வெளிநாடுகளில் நடந்த மாயம் – ஜெயிலர் விநியோகஸ்தர் மகிழ்ச்சி

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் பத்தாம் தேதி வெளியானது. இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யாகிருஷ்ணன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

வெளியானதிலிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் இப்படம் வசூலில் மட்டும் ஏறுமுகத்தில் இருக்கிறது என்கிறார்கள்.

தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களிலும் முதல்நாளிலிருந்தே நல்ல வசூலைப் பெற்று வரும் இந்தப்படம் ஆந்திராவில் மட்டும் சிரஞ்சீவி நடித்த போலோசங்கர் படம் வெளியானதால் சற்று குறைவாக இருந்தது. அந்தப்படம் சரியில்லை என்றதும் அங்கும் ஜெயிலர் படத்துக்குக் கூட்டம் அதிகமாகிவிட்டது என்கிறார்கள்.

இந்திய ஒன்றியத்தை விட வெளிநாடுகளில் இந்தப்படத்துக்கான வரவேற்பு இன்னும் அதிகமாக இருக்கிறதென்கிறார்கள்.

Ayngaran Karuna

Ayngaran Karuna

இந்தப்படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையை சுமார் முப்பத்தியிரண்டு கோடி கொடுத்து வாங்கியது ஐங்கரன் இண்டர்நேசனல் நிறுவனம்.

அப்போது அந்நிறுவனத்தின் தலைவர் கருணா கடும் விமர்சனங்களைச் சந்தித்தார் என்று சொல்லப்பட்டது.

ரஜினிகாந்தின் முந்தைய படமான அண்ணாத்த படம் சுமார் 14 கோடி மட்டுமே வசூலித்திருந்த நிலையில் அதைவிட இரண்டு மடங்குக்கு மேல் பணம் கொடுத்து இந்தப்படத்தை வாங்குகிறார், பாவம் அவர் தலையில் அவரே மண்ணள்ளிப் போட்டுக் கொள்கிறார் என்று அவருக்கு நெருங்கியவர்களே விமர்சனம் செய்தனர்.

ஆனால், வியாபாரம் என்றால் முன்னே பின்னே இருக்கும். நாம் அந்த ஓட்டத்தில் இருந்து கொண்டிருப்பது முக்கியம் என்று நினைத்து அவர் துணிந்து இறங்கினார் என்றார்கள்.

படம் வெளியானதும் எல்லோரும் வியக்கும் மாயம் நடந்துவிட்டது.

தொடக்கத்திலிருந்தே நல்ல வசூல், பெரும் வெற்றி.

வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நான்கு நாட்களில் மட்டும் அவர் போட்ட தொகை அவருக்குக் கிடைத்துவிட்டதாம்.

இந்த வாரம் மற்றும் வாரக்கடைசிவரை படம் நன்றாகப் போகும் வாய்ப்பு இருக்கிறது என்பதால் அவருக்கு போட்ட தொகையளவுக்கு அதாவது முப்பத்தியிரண்டு கோடி வரை இலாபம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

இதனால், அவரும் அவருடைய நிறுவனத்தினரும் அளவு கடந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இவரை விமர்சனம் செய்தவர்கள் வாயடைத்துப் போய் இருக்கிறார்கள்.

Related Posts