October 16, 2026
Uncategorized விமர்சனம்

ராயர் பரம்பரை – திரைப்பட விமர்சனம்

காதலே பிடிக்காத கதாநாயகன், அவரைத் துரத்தித் துரத்திக் காதலிக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட நாயகிகள் என்கிற ஒருவரியை வைத்துக் கொண்டு நகைச்சுவைப்படமொன்றைக் கொடுக்க முயன்றுள்ளனர். அதுதான் ராயர்பரம்பரை.

காதல் பிடிக்காத நாயகனாக கிருஷ்ணா நடித்திருக்கிறார்.துள்ளலும் துடிப்புமாக நடிப்பதில் தேர்ந்த அவருக்கேற்ற கதாபாத்திரம். அதை மிகவும் இரசித்து நடித்திருக்கிறார். நாயகிகள் அவரைத் துரத்தும்போது சிங்கிள்ஸ் பசங்களின் சாபத்தைப் பெறுவார் என்பதில் அய்யமில்லை.

கிருத்திகா, அன்ஷுலா மற்றும் சரண்யா ஆகியோர் நாயகிகள். மூவரில் நாயகன் யாரைக் காதலித்துக் கைப்பிடிக்கப்போகிறார் என்பதை யூகிக்கூடிய திரைக்கதைதான் என்பதால் மற்ற நாயகிகள் வரும் காட்சிகள் எளிதாகக் கடந்து போகின்றன.

தலைப்பில் இருக்கும் ராயராக நடித்திருக்கிறார் ஆனந்தராஜ். ஊர்ப்பெருமையையும் தன் பெருமையையும் ஒருசேரக் காப்பாற்றிய வேண்டிய கட்டாயத்தில் அவர் செய்யும் செயல்கள் சிரிக்க வைக்கின்றன.

நாயகனின் நண்பராக வரும் கல்லூரி வினோத், காதலர்களைப் பிரிக்கவே கட்சி நடத்தும் மொட்டைஇராசேந்திரன், தங்கதுரை ஆகியோர் சிரிக்க வைப்பதற்கென்றே படைக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கங்கே சிரிக்கவும் வைக்கிறார்கள். கடைசியில் பவர்ஸ்டார் சீனிவாசன் வரும் காட்சிகள் வயிற்றைப் பதம் பார்க்கின்றன.

தயாரிப்பாளர் சின்னசாமி, கஸ்தூரி, சேசு உள்ளிட்டோர் கவனிக்க வைக்கிறார்கள்.

காட்சிகள் வண்ணமயமாக இருக்கவேண்டும் என்கிற குறிக்கோளோடு பணியாற்றியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் விக்னேசு.அது படத்துக்கும் பலமாக இருக்கிறது.

கணேஷ் ராகவேந்திராவின் இசையில் பாடல்கள் இரசிக்கும்படி அமைந்திருக்கின்றன.பின்னணி இசையிலும் குறைவில்லை.

காதல், மோதல் ஆகியனவற்றை முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்து சொல்ல விழைந்திருக்கிறார் இயக்குநர் இராம்நாத்.டி. அதில் அவரும் வெற்றி பெற்று நம்மையும் மகிழ்விக்கிறார்.

– குமார்

Related Posts