பம்பர் – திரைப்பட விமர்சனம்
பணம் மட்டுமே வாழ்க்கை என்று நினைப்பவர்களை மையப்படுத்தி எழுதப்பட்டிருக்கும் கதை, அதற்குள் நடக்கும் நல்லது கெட்டதுகள், ஏற்றத்தாழ்வுகள் ஆகியனவற்றைக் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் காட்டியிருக்கும் படம் பம்பர்.
தூத்துக்குடியில் போக்கிலியாகத் திரியும் நாயகன் காவல்துறைக்குப் பயந்து சபரிமலைக்கு மாலை போடுகிறார். அங்கு போன இடத்தில் அவர் வாங்கும் பரிசுச்சீட்டுக்குப் பெரும்தொகை பரிசு கிடைக்கிறது. ஆனால் அந்தச் சீட்டை அவர் வாங்கிய இடத்திலேயே தவறவிட்டுவிடுகிறார். அந்தச் சீட்டை விற்ற பெரியவர், அறம் பிறழாமல் அந்தப் பரிசுச்சீட்டை உரியவரிடம் ஒப்படைக்க முயல்கிறார். அதனால் என்னவெல்லாம் நடக்கிறது என்பதைச் சொல்லியிருக்கிறது இந்தப்படம்.
நாயகன் வெற்றி, போக்கிலி பாத்திரத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார். ஆடல் பாடல் கொண்டாட்டமாகத் திரியும் அவர் பணமில்லாமல் அவமானப்படும் காட்சிகளில் நன்றாக நடித்து பார்க்கும் அனைவரையும் தம்மைப்போல்தான் இவரும் என்று உணரவைக்கிறார்.
இதுவரை வில்லனாகவே பார்த்து வந்த ஹரீஷ்பெரேடி இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கள்ளத்தனத்தை மட்டுமே காட்டிவந்த அவருடைய கண்கள் அன்பைப் பொழிகின்றன. மிகவும் சிரத்தையாக நடித்து கதைக்கு வலுச்சேர்த்திருக்கிறார். இவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை.
நாயகியாக நடித்திருக்கும் ஷிவானி நாராயணன் இருக்கிற இடத்துக்குக் கொஞ்சம் அதிகமானவராக இருக்கிறார்.அவருடைய அழகும் பொறுமையும் அவருக்கும் படத்துக்கும் பலமாக அமைந்திருக்கின்றன.
காவல்துறையின் தலைமைக்காவலர் வேடத்தில் கவிதாபாரதி கலக்குகிறார்.ஆதிரா, தங்கதுரை, அருவி மதன், ஜி.பி.முத்து உள்ளிட்டோரும் குறைவைக்கவில்லை.
கோவிந்த்வசந்தாவின் இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசை அளவாக அமைந்து படத்துக்கு உதவியிருக்கிறது.
வினோத்ரத்தினசாமியின் ஒளிப்பதிவில் தூத்துக்குடி மற்றும் கேரளாவுக்குச் சுற்றுலா சென்றுவந்த உணர்வு கிடைக்கிறது.
ஒரு பரிசுச்சீட்டை மையமாக வைத்துக் கதை எழுதி மனிதர்களின் மன அழுக்குகளை வெளுத்திருக்கிறார் இயக்குநர் எம்.செல்வகுமார்.நாயகன் வெற்றிக்குப் பணம் வருகிறது என்பது தெரிந்ததும் மனிதர்களில் நடக்கும் மாற்றங்களைக் காட்சிப்படுத்தி அதுபோன்றோரைக் கதறவைக்கும் அவர் ஹாரிஷ்பெரோடி கதாபாத்திரத்தை அவர் வடிவமைத்திருக்கும் விதத்தில் உயர்ந்துநிற்கிறார்.
– குமார்











