இன்ஃபினிட்டி – திரைப்பட விமர்சனம்
இனிஃபினிட்டி என்றால் முடிவிலி அதாவது எல்லையற்ற என்று பொருள். நாட்டில் நடக்கும் சில நிகழ்வுகளும் அது தொடர்பான எதிர்நிகழ்வுகளும் முடிவற்றவை என்பதைச் சொல்லியிருக்கும் படம் இன்ஃபினிட்டி.
காவல்துறை அதிகாரி வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த நட்டிக்கு இந்தப்படத்தில் பதவி உயர்வு கொடுத்திருக்கிறார்கள். இந்தப்படத்தில் அவர் சிபிஐ எனப்படும் நடுவன் புலனாய்வுத்துறை அதிகாரியாக வருகிறார்.
சென்னையில் நடக்கும் கொலைகளைப் பற்றி விசாரிக்கும் காவல்துறை அதிகாரியும் கொல்லப்படுவதால் சிபிஐ நட்டி விசாரணை அதிகாரியாகிறார்.
வேடத்தின் தன்மை உணர்ந்து நிதானமாக நடித்திருக்கிறார். விசாரணை என்பது ஒருவரை உடல்ரீதியாகத் துன்புறுத்துவன்று சிந்தித்துச் செயல்படுவது என்பது அவருடைய நடவடிக்கைகளில் வெளிப்படுகிறது.
மருத்துவராக நடித்திருக்கும் வித்யாபிரதீப் நன்று. அவருடைய உருண்டு திரண்ட கண்கள் பாத்திரத்துக்குப் பலம் சேர்த்திருக்கின்றன.
நகைச்சுவைக்கென முனீஷ்காந்தை வைத்திருக்கிறார்கள். அவரும் அதற்கான முயற்சிகள் செய்திருக்கிறார். முடிவு சுபமாக இல்லை.
அறிமுக நடிகர் ஆதவன் கவனிக்க வைக்கிறார்.
முருகானந்தம், சார்லஸ் வினோத், வினோத் சாகர், நிகிதா, ஜீவா ரவி உள்ளிட்டு படத்தில் பலர் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் சர்வணன்ஸ்ரீ, புகழ்பெற்ற ஒளிப்பதிவாளருக்குக் காட்சிகள் வைக்கிறோம் என்கிற பதட்டத்திலேயே பணிபுரிந்திருப்பார் போலிருக்கிறது.
இசையமைப்பாளர் பாலசுப்பிரமணியன்ஜி இசையில் உயிர் திறந்து பாடல் கேட்கும் இரகம். பின்னணி இசை பெரிதாக அமையவில்லை.
இம்மாதிரியான படங்களின் திரைக்கதை கிட்டத்தட்ட ஒரேமாதிரியாக இருக்கும். அதைத் தவிர்க்கவியலாது.அதேசமயம்,கதையில் நடக்கிற கொலைக்கான காரணம் முக்கியப்பங்கு வகிக்கும், அதை இந்தப்படத்தில் சர்ச்சைக்குரிய விதத்தில் அமைந்திருக்கிறார் இயக்குநர் சாய்கார்த்திக்.
– குமார்











