October 18, 2026
சினிமா செய்திகள்

சென்னையில் அதிநவீன ஸ்டுடியோ கட்டுகிறார் விஜய்

நடிகர் விஜய் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகும் லியோ படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்தப்படத்தை செவன்ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித்குமார் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள விஜய், அடுத்து வெங்கட்பிரபு இயக்கவிருக்கும் புதியபடத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க ஓரிரு மாதங்கள் ஆகும் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில், சென்னையில் திரைப்படப் படப்பிடிப்பு உட்பட பல வகைப் பயன்பாடுகள் கொண்ட ஒரு அதிநவீன அரங்கத்தை நிர்மாணிக்கிறாராம் விஜய்.

சென்னை திருவான்மியூரில் சுமார் ஒரு ஏக்கர் நிலத்தில் அந்த அரங்கம் அமைக்கப்படவிருக்கிறது என்கிறார்கள்.

அந்த நிலம் ஒளிப்பதிவாளர் மனோஜ்பரமஹம்சாவுக்குச் சொந்தமானதாம். அதிநவீன் அரங்கம் அமைப்பது அவருடைய திட்டம்தான் என்கிறார்கள்.

ஆனால், அதற்குப் பெரும் பொருட்செலவு ஆகும் என்பதால் அதைச் செய்யவியலாமல் இருந்திருக்கிறார்.

விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் பணியாற்றிய போதே இதுகுறித்து அவரிடம் விளக்கியிருக்கிறார் மனோஜ்பரமஹம்சா. அதன்பின், லியோ படத்திலும் இருவரும் இணைந்து பணிபுரிந்தனர்.

அப்போது, அந்த அரங்கம் அமைப்பதற்கு ஆகும் செலவை நானே செய்கிறேன் என்று சொல்லியிருக்கிறார் விஜய்.

பிறகென்ன, அந்த அதிநவீன அரங்கம் அமைக்கும் வேலைகள் வேகமாகத் தொடங்கிவிட்டன என்கிறார்கள்.

விஜய்யின் முதலீட்டில் உருவாகிறது என்பதால் லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் மற்றும் அந்தப்படத்தின் இணைதயாரிப்பாளர் ஜெகதீஷ் ஆகியோர் அந்தப் பணிகளை மேற்பார்வையிடுவதாகச் சொல்கிறார்கள்.

இவ்வளவு காலம், தான் சம்பாதித்ததைச் செலவு செய்ய முன்வராத விஜய், இப்போது பல இடங்களில் முதலீடு செய்யத் தொடங்கியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

அவருடைய முதலீட்டில் ஜெகதீஷ் நடத்தும் தி ரூட் நிறுவனம் உருவாக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் வந்தன. அதைத் தொடர்ந்து இப்போது இந்தச் செய்தி உலாவந்து கொண்டிருக்கிறது.

Related Posts