கேங்ஸ்டர் ஆகும் அசோக்செல்வன்
அண்மையில் வெளியான போர்த்தொழில் படம் பெரிய வெற்றி அடைந்தது. பெரிய கதாநாயகர்களின் படங்கள்தாம் திரையரங்குகளில் நல்ல வசூல் செய்யும் என்கிற கருத்தை உடைக்கும் வண்ணம் சுமார் 13 கோடி வரை தயாரிப்பாளரின் பங்காக வசூலித்திருக்கிறது என்று சொல்கிறார்கள்.
இதனால் இப்படத்தில் நாயகனாக நடித்த அசோக்செல்வனுக்கு மிகுந்த நற்பெயர். அவர் இதுவரை காதல் நாயகனாக நடித்து வந்தார்.இதற்கடுத்து இவர் நடித்திருக்கும் சபாநாயகன், ப்ளுஸ்டார் ஆகிய படங்களிலும் காதல்கதைதான்.
போர்த்தொழில் படத்தில் காவல் அதிகாரியாக நடித்திருந்தார். இதனால் இவரை வைத்து ஆக்சன் படமெடுக்கும் தைரியம் வந்திருக்கிறது.
நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா திரைப்படத் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். வெங்கட்பிரபுவின் கோவா படத்தைத் தயாரித்திருந்தார்.
இதற்கடுத்து ஒரு இணையத் தொடரைத் தயாரிக்கவிருக்கிறார்.
அமேசான் நிறுவனத்துக்காக அவர் தயாரிக்கவிருக்கும் இணையத்தொடரை ஆபிரகாம் எனும் புதியவர் இயக்கவிருக்கிறார்.
இந்த இணையத் தொடர் கேங்ஸ்டர் எனப்படும் பெரும் தாதாக்களை மையமாகக் கொண்ட கதை என்று சொல்லப்படுகிறது.முழுக்க முழுக்க ஆக்சன் வகையில் தயாராகவிருக்கும் இந்தத் தொடரில் கதாநாயகனாக நடிக்கவிருப்பது அசோக்செல்வன்.
இதுவரை காதல் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் அசோக்செல்வன் நடித்த போர்த்தொழில் வெற்றி பெற்றதால் அவரை நம்பி முழுமையான ஆக்சன் தொடரை எடுக்கவிருக்கிறார்கள்.
விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் உடனே படப்பிடிப்பும் தொடங்கவிருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.











