ஜெயிலர் கோரிக்கை தர்மசங்கடத்தில் மாவீரன்
சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம், ‘மாவீரன்’. ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்குகிறார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடிக்கின்றனர். இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகிறது. தெலுங்கில் இந்தப் படத்திற்கு ‘மாவீருடு’ என தலைப்பிடப்பட்டுள்ளது.
சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ‘ஆடை’, ‘மண்டேலா’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த பரத் ஷங்கர் இசையமைக்கிறார். இந்தப் படம் வரும் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதே தேதியில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படமான ‘ஜெயிலர்’ படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.
ஜெயிலர் படத்தில் தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
மாவீரன் படத்தின் வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. ஜெயிலர் படத்தின் வெளியீட்டுத் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய சிவகார்த்திகேயன், மாவீரன் வெளியாகும் போதே ஜெயிலர் படமும் வெளியாகும் என்று சொல்லப்படுகிறதே? என்று கேட்டதற்கு, நாங்கள் அறிவித்துவிட்டோம், அந்தப்படத்தின் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாகச் சொல்லப்படவில்லை. அப்படிச் சொன்ன பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னார்.
இதற்கிடையே, ஜெயிலர் படத்தை ஆகஸ்ட் 10 அன்று வெளியிடவேண்டும் என்று சொல்லிவிட்டார். அதனால்,அந்தத் தேதியில் நாங்கள் படத்தை வெளியிட்டாக வேண்டும். ஒரேநேரத்தில் இரண்டு படங்களும் வந்தால் வசூலில் பாதிப்பு ஏற்படும் எனவே, மாவீரன் வெளியீட்டைத் தள்ளி வையுங்கள் என்று நிர்ப்பந்தம் செய்கிறார்களாம்.
இதனால் மாவீரன் படக்குழுவினர் தர்மசங்கடத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
என்ன முடிவெடுக்கப் போகிறார்களோ?











