வெளியிடுமுன்பே இலாபம் – தனுஷின் வாத்தி விநியோகக் கணக்கு
நடிகர் தனுஷின் அடுத்த வெளியீடு வாத்தி.இந்தப்படத்தில் சம்யுக்தா மேனன்,சாய்குமார், தனிக்கெல்லா பரணி, சமுத்திரக்கனி, தொட்ட பள்ளி மது, நரா சீனிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, சாரா, ஆடுகளம் நரேன், இளவரசு,’ நான் கடவுள் ‘ ராஜேந்திரன், ஹரிஷ் பேரடி மற்றும் பிரவீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வெங்கி அட்லுரி இயக்கியுள்ள இந்தப்படத்தை,‘சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ சூர்யதேவர நாக வம்சி, ‘ ஃபார்ச்சூன் 4 சினிமாஸ்’ சாய் சௌஜன்யா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்தப் படம் டிசம்பர் 2 ஆம் தேதி அன்று தெலுங்கு மற்றும் தமிழில் உலகம் முழுவதும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்பின் அந்தத் தேதியை மாற்றி 2023 பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை லலித்குமாரின் செவன்ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் பெற்றிருக்கிறது.
இந்தப்படத்தின் உரிமையை வாங்கப் பலர் முன்வந்த நிலையில் செவன்ஸ்கிரீன் ஸ்டுடியோ பெற்றுள்ளது. இதற்காக அந்நிறுவனம் கொடுத்துள்ள தொகை சுமார் 13.5 கோடி என்று சொல்லப்படுகிறது.
இப்போதுள்ள சூழலில் தனுஷ் படத்தை சுமார் 17 அல்லது 18 கோடிக்கு தமிழ்நாட்டில் வியாபாரம் செய்துவிடலாம் என்கிற நிலை உள்ளதாக வியாபாரத்தரப்பில் சொல்லப்படுகிறது.
இதனால் வெளியீட்டுக்கு முன்பே செவன்ஸ்கிரீன் நிறுவனத்துக்கு சில கோடிகள் இலாபம் கிடைக்கும் என்கிறார்கள்.
படம் நன்றாக இருந்து நன்றாக ஓடினால் இன்னும் பெரிய இலாபம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.











